எங்கள் மாநிலத்தில் நடக்கும் வன்முறையைத் தடுக்க முடியாமல் இருப்பதால், எனக்கு வேதனையாக இருக்கிறது. ஆதலால், நான் எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் திரிவேதி இன்று அறிவித்தார்.
மேற்குவங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல்- மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்கும் பொருட்டு, முதல்வர் மம்தா பானர்ஜி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
மம்தாவை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு, ஆட்சியைப் பிடிக்க பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் கூட்டணி அமைத்து அரசியல் வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
இதனால் மேற்கு வங்கத்தில் நாள்தோறும் கட்சிகளின் சார்பில் பொதுக்கூட்டம், பேரணி என அரசியல் பரபரப்பு தொற்றியுள்ளது. அதேசமயம், அரசியல் சார்ந்த வன்முறைச் சம்பவங்களும் குறைவில்லாமல் நடக்கிறது.
இந்நிலையில் மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. தினேஷ் ரிதிவேதி இன்று பேசுகையில், “ என் மாநிலத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. அதைத் தடுக்க முடியாதவனாக என்ன செய்ய வேண்டும் என்று குழப்பத்தில் நான் இங்கு அமர்ந்திருக்கிறேன். இங்கு என்னால் எதையும் கூற முடியாது. ஆதலால், நான் என் எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன்.
என்னை இந்த மாநிலங்களவைக்கு அனுப்பிய எனது கட்சித் தலைமைக்கு நான் நன்றி கூறுகிறேன். மாநிலத்தில் நடக்கும் வன்முறையைத் தடுக்க ஏதும் செய்யவில்லையே என என் மனசாட்சி கேட்பது, வேதனையாக இருக்கிறது. ஏதும் செய்யாமல் இங்கு அமர்ந்திருப்பதைவிட பதவியை ராஜினாமா செய்துவிடு என்று ஆத்மா கூறுகிறது. மாநில மக்களின் நலனுக்காக பயணியாற்றப் போ என்று கூறுகிறது.
ஆதலால், என் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். ஏதாவது நடக்கும் போது இந்த உலகம் இந்தியாவை கவனிக்கும். மேற்கு வங்கத்தில் நடக்கும் பல்வேறு சம்பவங்களை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
சுவாமி விவேகானந்தாவின் வார்த்தைகளான இலக்கை அடையும் வரை விழித்திருக்க வேண்டும், எழுந்திருக்க வேண்டும் என்று என் உள்மனது கூறுகிறது. ஆதலால் பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்தார்.
அப்போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்.பி. சுவேந்து ராய் எழுந்து பேசுகையில் “ எங்கள் கட்சியின் அடிமட்டத் தொண்டர் ஒருவரை இந்த அவைக்கு எங்கள் கட்சி தேர்வு செய்து அனுப்பிவைக்கும்” எனத் தெரிவித்தார்.
மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் நாராயன் சிங் கூறுகையில் “ இந்த அவையிலிருந்து ராஜினாமா செய்ய நடைமுறைகள் இருக்கின்றன. திரிவேதி ராஜினாமா கடிதத்தை அவைத் தலைவரிடம் அளிக்கலாம்” எனத் தெரிவித்தார்.