ஹைதராபாத் மாநகர மேயர் விஜயலட்சுமி, துணை மேயர் லதா 
இந்தியா

ஹைதராபாத் மாநகராட்சி வரலாற்றில் முதல்முறை மேயர், துணை மேயராக 2 பெண்கள் தேர்வு

என். மகேஷ்குமார்

ஹைதராபாத் மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக நகர மேயர்,துணை மேயர் பதவிகளுக்கு பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அதிக வார்டுகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த எதிர்பார்ப்பை பாஜக பொய்த்து போகச் செய்தது.

காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகள் பல இடங்களில் டெபாசிட் இழந்தன. காங்கிரஸ் 2 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் வேட்பாளர்கள் அனைத்து வார்டுகளிலும் தோல்வியைத் தழுவினர்.

ஆளும் கட்சியான டிஆர்எஸ்மொத்தமுள்ள 150 வார்டுகளில் போட்டியிட்டு 55 இடங்களில் வெற்றிபெற்றது. கடந்த தேர்தலில் இக்கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக பாஜக 48 இடங்களிலும் எம்ஐஎம் கட்சி 44 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் சுயேச்சை ஓரிடத்திலும் வெற்றி பெற்றனர்.

கடந்த டிசம்பர் 1-ம் தேதிவாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு நேற்று மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வாக்கெடுப்பு, கவுன்சிலர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. டிஆர்எஸ் கட்சியை சேர்ந்த விஜயலட்சுமி மேயராகவும், இதே கட்சியை சேர்ந்த லதா துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டனர். எம்ஐஎம் கட்சி கவுன்சிலர்கள் டிஆர்எஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். வெற்றி பெற்ற மேயரும், துணை மேயரும், முதல்வர் கே. சந்திரசேகர ராவுக்கு நன்றி கூறினர்.

ஹைதராபாத் மாநகராட்சி வரலாற்றில் முதல்முறையாக மேயர், துணை மேயர் பதவிகளை 2 பெண்கள் ஏற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT