தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் நேற்று காலையில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்க, வருவாய் துறை, போலீஸார், தீயணைப்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேடக் மாவட்டம், புல்கல் மண்டலம், பொம்மாரெட்டி கூடம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கும்மரி ராயுலு, மொகிலம்மாள் தம்பதிக்கு பாலய்யா (5), ராகேஷ் (3) ஆகிய இரண்டு மகன்கள். நேற்று காலையில் பாலய்யாவும், ராகேஷும் தங்களது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் விளையாட சென்றனர்.
அப்போது மூடப்படாத 150 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் ராகேஷ் தவறி விழுந்துள்ளான். உடனடியாக இதுகுறித்து பாலய்யா தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தான். சம்பவ இடத்துக்குச் சென்ற பெற்றோர், கயிறு மூலம் ராகேஷை வெளியே கொண்டு வர முயற்சி செய்துள்ளனர். ஆனால் முடியாததால், புல்கல் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீஸார், வருவாய் துறை அதிகாரிகள், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்ததில், ராகேஷ், 33 அடி ஆழத்தில் தலைகீழாக சிக்கிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து 2 பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, ஆழ்துளை கிணற்றின் அருகில் தோண்ட தொடங்கினர். மாலை 6 மணி வரை 9 அடி ஆழம் மட்டுமே தோண்ட முடிந்தது. இதற்குள் இடையே பாறாங்கல் வந்ததால் சில மணி நேரம் மீட்பு பணிக்கு இடைஞ்சல் ஏற்பட்டது.
இதனிடையே ராகேஷுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. சம்பவ இடத்தில் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். இரவு முழுவதும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.