இந்தியாவை 4 பேர் தான் வழி நடத்தி வருகின்றனர், அந்த 4 பேருக்காகவே விவசாயச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என மக்களவையில் ராகுல் காந்தி பேசினார்.
மக்களவையில் இன்று பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார். அவர் தெரிவித்த சில கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 70 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 11 சுற்றுப் பேச்சுவார்த்தை மத்திய அரசுக்கும், விவசாயிகள் அமைப்புக்கும் இடையே நடந்து எந்தத் தீர்வும் எட்டவில்லை.
இந்தநிலையில் நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாத்தில் பங்கேற்று பதிலுரையாற்றினார்.
அவர் பேசுகையில் ‘‘வேளாண் துறைக்கு ஊக்கமளிக்கவே 3 வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த சட்டத்திற்கு தவறான வர்ணம் பூசி காங்கிரஸ் விமர்சனம் செய்கிறது. இந்த சட்டங்களை தடம்புரள செய்ய காங்கிரஸ் திட்டமிடுகிறது. எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்புகின்றன.’’ எனக் கூறினார்.
பிரதமர் பேசியபோது அவர் தெரிவித்த சில கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
இந்தநிலையில் மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களை எம்.பி.யுமான ராகுல் காந்தி மத்திய அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று மக்களவையில் பேசினார். அவர் பேசியதாவது:
நமது நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. ஆனால் விவசாயத்தை அழிக்கும் நோக்கிலேயே விவசாயச் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை.
விவசாயி தனது விளை பொருட்களின் விலையை நிர்ணயிக்க, தொழிலதிபர் முன் நிற்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 2வது வேளாண் சட்டம் விளைப் பொருட்கள் பதுக்கலை ஊக்குவிக்கும். விளைப் பொருட்கள் நிறுவனங்களின் குடோன்களில் அழுகும் நிலை தான் ஏற்படும்.
இந்தியாவை 4 பேர் தான் வழி நடத்தி வருகின்றனர், அந்த 4 பேர் யார் என அனைவருக்கும் தெரியும். நாம் இருவர், நமக்கு இருவர் என்பது அரசின் குடும்ப கட்டுப்பாடு பிரச்சாரமாக முன்பு இருந்தது. தற்போது அது வேறு வடிவில் உருவெடுத்துள்ளது. இந்த அடிப்படையில் நாட்டை 4 பேர் ஆட்சி செய்கின்றனர். அந்த நான்கு பேருக்காகவே விவசாயச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.