மக்கள் ஆதரவை இழந்துவிட்ட காங்கிரஸ் கட்சி வேளாண் சட்ட விவகாரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக பொய்களைக் கூறி மக்களை தவறாக வழிநடத்துகிறது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
மத்திய அரசின் 3 புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் கடந்த நவம்பர் 26-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகளுடன் மத்திய அரசு பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது இந்த சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்கத் தயார் என்றும் கூறியது. எனினும் இதைவிவசாயிகள் ஏற்காததால் இந்தவிவகாரத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று தனது ட்விட்டர் பதிவுகளில் “விவசாயிகளின் தோழனான மத்திய அரசு, விவசாயிகளின் பெரும் நலனுக்காகவே வேளாண் சீர்திருத்த சட்டங்களை இயற்றியது. ஆனால் மக்கள் ஆதரவை இழந்துவிட்ட காங்கிரஸ் கட்சி, ஒன்றன்பின் ஒன்றாக பொய்களைக் கூறி நாட்டுமக்களை தவறாக வழிநடத்துகிறது. வேளாண் சீர்திருத்த சட்டங்கள்குறித்து நாட்டின் நாடாளுமன்றத்திலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் பொய்களை கூறுகின்றனர். காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங் பிட்டு மீண்டும் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்த முயன்றபோதுஅவரது பொய்களை எங்கள் அமைச்சர் அனுராக் தாக்கூர் அம்பலப்படுத்தினார்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறும்போது, “புதிய வேளாண் சட்டங்களில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்கூற எதிர்க்கட்சிகள் தவறிவிட்டன. மாநிலங்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது இந்த சட்டங்களில்உள்ள விதிமுறைகள் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்கவில்லை.
இந்த சட்டங்களில் உள்ள குறைபாடுகள் என்னவென்று கடந்த 2 மாதங்களாக விவசாயிகள் சங்கங்களிடம் நான் கேட்டு வருகிறேன். வேளாண் சீர்திருத்தங்களை எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்க்கின்றனர். ஆனால் ஒருவர்கூட இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எந்தவகையில் தீமையை ஏற்படுத்தும் என்பதை விளக்க முயற்சிக்கவில்லை” என்றார்.