உள்நாட்டு பாதுகாப்பை கட்டுக்கோப்பில் வைத்திருக்க தவறினால் எந்த நாடும் உலக வல்லரசாக உருவெடுக்க முடியாது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாதில் உள்ள சர்தார் வல்லபாய் தேசிய போலீஸ் அகாடமியில் நேற்று நடைபெற்ற ஐபிஎஸ் பயிற்சி நிறைவு விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது: உள்நாட்டு பாதுகாப்பு போலீஸ் கையில் உள்ளது. அவர்கள்தான் இதற்கான பணியில் ஈடுபட்டு வெற்றி காண வேண்டும்.
எதிர்காலத்தில் உள்நாட்டு பாதுகாப்பு சம்பந்தமான சவால்கள் அதிகரிக்கும். இது தொடர்பாக மக்களின் நம்பிக்கையை பெற்று அவர்களை ஈர்த்து உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான மோதல்களில் போலீஸார் வெற்றி காண வேண் டும். போருக்கு பிந்தைய காலத்தை பார்க்கும்போது 37 நாடுகள் தோல்வி கண்டுள்ளது தெரிய வரும். இவற்றில் 28 நாடுகள் உள்நாட்டுப் பாதுகாப்பை கட்டுக் கோப்பில் வைத்திருக்கத் தவறிய தால் சறுக்கலை சந்தித்தவை.
கிழக்கு பாகிஸ்தானில் உள்ள மக்களை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் திணறியது. வல்லரசாக திகழ்ந்த முந்தைய சோவியத் யூனியனும் தோல்வி கண்டுள்ளது.
சிறப்பான ராணுவம்,திறம்பட்ட தொழில்நுட்பம் போன்றவை கையில் இருந்தும் வியட்நாம் போரில் அமெரிக்கா தோல்வி கண்டது. எதிர்கால போர்க்கலை களாலும் வரக்கூடிய சவால் களை தவிடுபொடியாக்கும் தொழில் நுட்பத்தில் வல்லவர்களாக போலீஸ் அதிகாரிகள் வரவேண் டும். இவ்வாறு தோவல் தெரிவித்தார்.