இந்தியா

2ஜி முறைகேடு: குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யக் கோரிய கனிமொழி மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

எம்.சண்முகம்

2ஜி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து கனிமொழி தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய் துள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதி மன்றத்தை மட்டுமே அணுக முடியும் என்ற முந்தைய உத்தரவிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கு, டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் கனிமொழி உள்ளிட்டோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இதன் மீது விவாதங்கள் நடந்து பின்னர் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. சிபிஐ நீதிமன்றத்தில் இந்த முடிவை எதிர்த்து கனிமொழி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ரோஹின்டன் நாரிமன் அடங் கிய அமர்வு முன்பாக நேற்று விசா ரணைக்கு வந்தது. 2ஜி வழக்கு களுக்கான சிபிஐ அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், ‘இந்த வழக்கில் இருதரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இறுதி வாதம் நிறைவடையும் நிலையில் உள்ளது. கனிமொழி குற்றவாளியா, இல்லையா என்பதை இனிமேல் விசாரணை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.

கனிமொழி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமரேந்திர சரண், ‘இந்த மனு இரண்டரை ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கு கனிமொழி பொறுப்பல்ல. குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் மீது உறுதியான சந்தேகம் இருந்தால் மட்டுமே குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால், கனிமொழி ஒரு துளி அளவு தவறு செய்ததற்கான ஆதாரம் கூட இல்லை. எனவே, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு முடியும் நிலையில் இருப்பதால், இந்த கட்டத்தில் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க நாங்கள் விரும்பவில்லை என்று கூறி தள்ளுபடி செய்தனர்.

2ஜி வழக்கில் மற்றொரு குற்றவாளியான ஸ்வான் டெலிகாம் நிர்வாகி சாஹித் உஸ்மான் பல்வாவும் இதேபோன்ற மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

முந்தைய உத்தரவில் மாற்றம்

அலைக்கற்றை ஊழல் தொடர்பான விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தபோது, இந்த விவகாரத்தின் முக்கியத்துவம் கருதி, விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தை மட்டுமே அணுக முடியும் என்று ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 2ஜி வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் வர வேண்டும் என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவில் மாற்றம் செய்தும் நேற்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். புதிய உத்தரவின்படி, 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் இனி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும். ஆனால், விசாரணை நீதிமன்றத்தின் ஒவ்வொரு உத்தரவையும் எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது. இறுதி தீர்ப்பை எதிர்த்து மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும் என்பதையும் நீதிபதிகள் தெளிவுபடுத்தி உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT