நடிகர் தீப் சித்துவைக் கைது செய்து போலீஸார் அழைத்துச் சென்ற காட்சி : படம் | ஏஎன்ஐ 
இந்தியா

குடியரசு தின வன்முறை: செங்கோட்டையில் அத்துமீறலுக்குத் தலைமை ஏற்ற நடிகர் தீப் சித்து கைது; 7 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவு

பிடிஐ

குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் செங்கோட்டையில் நடந்த வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்புலத்தில் இருந்தததாகக் கூறப்படும் நடிகர் தீப் சித்துவை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

டெல்லி நகரக் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று நடிகர் தீப் சித்து ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு நீதிபதி அனுமதியளித்தார்.

டெல்லியில் கடந்த மாதம் 26-ம் தேதி விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் விவசாயிகளில் ஒரு பிரிவினர் டெல்லி செங்கோட்டைக்குள் சென்று அத்துமீறலில் ஈடுபட்டனர். சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி கொடியேற்றும் இடத்தில் மதரீதியான கொடியை ஏற்றியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இது தொடர்பாக பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்திருந்தார்.

மேலும், டெல்லியின் பல்வேறு இடங்களில் போலீஸாருடன் நடந்த மோதலில், 500க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். இதில் டெல்லி செங்கோட்டை வன்முறைக்குத் தலைமை தாங்கி நடத்தியவர் நடிகர் தீப் சித்து என்று பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின.

நடிகர் தீப் சித்துவை ஏன் கைது செய்யவில்லை என சிவசேனா கட்சி வெளிப்படையாகக் கேள்வி எழுப்பியது. இந்த விவகாரம் மத்திய அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வந்தது. இதையடுத்து, நடிகர் தீப் சித்துவைக் கைது செய்யும் முயற்சியில் டெல்லி போலீஸார் தீவிரமாக இறங்கினர். கடந்த 14 நாட்கள் தீவிர முயற்சிச்குப் பின் நடிகர் தீப் சித்து கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து டெல்லி போலீஸ் ஆணையர் சிறப்புப் பிரிவு சஞ்சீவ் குமார் யாதவ் கூறுகையில், “குடியரசு தினத்தில் டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியின்போது செங்கோட்டையில் நடந்த வன்முறைக்கு நடிகர் தீப் சித்து காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரைத் தேட டெல்லி போலீஸ் சார்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவினர் தொடர்ந்து நடத்தி வந்த சோதனையில், நேற்று முன்தினம் இரவு 10.40 மணிக்கு டெல்லி கர்னால் புறவழிச்சாலையில் தீப் சித்துவைக் கைது செய்தனர். செங்கோட்டை வன்முறை தொடர்பாக குற்றவியல் பிரிவு போலீஸார் தீப் சித்துவிடம் விசாரணை நடத்துவார்கள்.

செங்கோட்டை வன்முறைக்குப் பின், தீப் சித்து சிங்கு எல்லையில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து கார் மூலம், சோனிபட், கர்னால் வழியாக பாட்டியாலாவுக்குச் சென்றுவிட்டார்.

பஞ்சாப்பில் கடந்த 14 நாட்களாகப் பல்வேறு இடங்களை மாற்றி வந்த தீப் சிந்து, ஹரியாணா, இமாச்சலப் பிரதேசத்திலும் தலைமறைவாக இருந்துள்ளார். கடந்த 27-ம் தேதி முதல் தீப் சித்துவின் செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டது.

நடிகர் தீப் சித்துவைக் கைது செய்ய 6 சிறப்புக் குழுவினர் உருவாக்கப்பட்ட பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். மேலும் தீப் சித்து குறித்து யாரேனும் தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் எனவும் விளம்பரம் செய்திருந்தோம்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT