முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களைக் கூறிய பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு எதிராக அக்பர் தொடர்ந்திருந்த அவதூறு வழக்கில் இன்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீடூ” என்ற பெயரில் டுவிட்டர் தளத்தில் பகிர்ந்தனர்ர். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த மீடூ இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்படைந்தனர்.
அந்த வகையில், பிரபல பத்திரிகையாளராக இருந்து பாஜகவில் இணைந்து வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பொறுப்பில் இருந்த மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பரும் மீடூ பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகினார்.
எம்.ஜே. அக்பர் மீது பத்திரிகையாளர் பிரியா ரமணி மீடு இயக்கத்தில் அளி்த்த புகாரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அக்பருடன் பணியாற்றியபோது, நான் பாலியல் தொந்தரவுகளை சந்தித்தேன் எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, சில பெண் பத்திரிகைாயளர்களும் அக்பரால் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளையும் பதிவிட்டனர்.
இதைதொடர்ந்து, எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர்களில் ஒருவரான பிரியா ரமணி மீது டில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் அவதூறு வழக்கை கடந்த 2018-ம் ஆண்டு அக்போடர் 15-ம்தேதி அக்பர் தொடர்ந்தார்.
பிரியா ரமணியின் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்த அக்பர், தனது புகழுக்கும், மரியாதைக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கில் புகார் கூறப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
அக்பர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும், போராட்டமும் வலுத்ததைத் தொடர்ந்ந்து, 2018, அக்டோபர் 18-ம் தேதி தனது மத்திய அமைச்சர் பதவியையும் அக்பர் ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்த வழக்கின் விசாரணை பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அதன்பின் டெல்லி முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு 2019, மே4ம்தேதி மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்து வந்த ரோஸ் அவென்யு நீதிமன்ற நீதிபதி விஷால் பூஜா கடந்த 2019, நவம்பர் 18-ம் தேதி மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக நீதிபதி ரவிந்திர குமார் நியமிக்கப்பட்டார். அக்பர் தரப்பிலும், பத்திரிகையாளர் பிரியா ரமணி தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் கடந்த 1-ம் தேதி நீதிபதி ரவிந்திர குமார் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கில் பத்திரிகையாளர் பிரியாரமணி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.