இந்தியா

பிஹாரில் அமைச்சரவை விரிவாக்கம்: ஷாநவாஸ் உசேன் உட்பட 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

செய்திப்பிரிவு

பிஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் முஸ்லிம் முகங்களில் ஒருவருமான ஷாநவாஸ் உசேன் உட்பட 17 பேர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

பிஹார் சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது.

பாஜகவை விட நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் குறைவான இடங்களில் வென்றபோதிலும் முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றார். அவருடன் பாஜகவை சேர்ந்த 2 துணை முதல்வர்கள் உள்ளிட்ட 14 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்த 14 பேரில் 7 பேர் பாஜவையும் 5 பேர் ஐக்கிய ஜனதா தளத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, விகாஷீல் இன்சான் கட்சி சார்பில் தலா ஒருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.இவர்களில் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் பின்னர் பதவி விலகினார்.

இந்நிலையில் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட் டது. பாஜக சார்பில் 9 பேர், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் 8 என மொத்தம் 17 பேர் நேற்றுஅமைச்சர்களாகப் பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளருமான ஷாநவாஸ் உசேன், பிஹார் சட்டமேலவை உறுப்பினராக அண்மையில் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் புதிய அமைச்சர்களில் முதலாவதாக ஷாநவாஸ் உசேன் பதவியேற்றார்.

SCROLL FOR NEXT