மாநிலங்களவை எம்.பி. பதவியின் பதவிக்காலம் முடியவுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தை புகழ்ந்து பேசியபோது பிரதமர் மோடி கண் கலங்கினார்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் குலாம் நபி ஆசாத் 2015-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் மாநிலங்களவை எம்.பி.யானார். அவரது பதவி காலம் நிறைவடைகிறது.
ஜம்மு காஷ்மீர் தற்போது 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதனால் குலாம் நபி ஆசாத் வேறு ஒருமாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு அவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதும் உறுதியாக தெரியவில்லை.
குலாம் நபி ஆசாத்துடன் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் இதையாட்டி அவர்களுக்கு பிரியாவிடை நடைபெற்றது. இதையொட்டி பிரதமர் மோடி பேசினார்.
மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியதாவது:
குலாம் நபி ஆசாத் சிறந்த மனிதர், அவருக்கு கர்வம் எப்போதும் இருந்ததில்லை. சிறந்த அரசியல்வாதி. தான் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சிக்காக பெரும் தொண்டாற்றி வருபவர்.
குலாம் நபி ஆசாத் காஷ்மீரில் இருந்தபோது குஜராத்தை சேர்ந்த சில சுற்றுலா பயணிகள் தீவிரவாத தாக்குதல்களில் சிக்கியிருந்தனர். அவர்களை காப்பாற்றுவதற்காக அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, காஷ்மீர் முதல்வராக இருந்த குலாம் நபி ஆசாத் ஆகியோரை நான் தொடர்பு கொண்டேன்.
அப்போது அந்த அளவுக்கு இருவரும் உதவி செய்தனர். குலாம் நபி ஆசாத் அடிக்கடி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதை தெரிவித்துக்கொண்டே இருந்தார். என்றும் நான் குலாம் நபி ஆசாத்துக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன்
அரசியல் ரீதியாக முக்கிய ஆலோசனைகளை பலமுறை குலாம் நபி ஆசாத் எனக்கு கூறி உள்ளார்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
குலாம் நபி ஆசாத்தை புகழ்ந்து பேசியபோது பிரதமர் மோடி கண் கலங்கினார்.