உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்துக்கு, பைசாபாத் முஸ்லிம்கள் நன்கொடை வழங்கி உள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கோயில் கட்டுமான செலவுக்கு நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், உ.பி.யின் பைசாபாத் நகர முஸ்லிம்கள், ராமர் கோயில் கட்ட நன்கொடை வழங்கி உள்ளனர்.
இதுகுறித்து ராம் பவன் தலைவர் சக்தி சிங் கூறும்போது, ‘‘நிதி சமர்ப்பண அபியான்’ திட்டத்தின் கீழ், பைசாபாத்தை சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.5,100 நன்கொடை வழங்கினர்’’ என்று தெரிவித்தார்.
ராம் பவனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நன்கொடை வழங்கிய பிறகு, முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் அமைப்பின் உறுப்பினர் ஹாஜி சயீத் அகமது கூறும்போது, ‘‘கடவுள் ராமர் எல்லோருக்கும் பொதுவானவர். அவருக்கு கோயில் கட்டுவதற்கு முஸ்லிம்கள் நாங்கள் பெரும் எண்ணிக்கையில் உதவி செய்வோம்’’ என்றார்.
அவர் மேலும் கூறும்போது, ‘‘இந்துஸ்தானுக்கு சொந்தமானவர் ராமர். நாங்களும் இந்த நாட்டை சேர்ந்தவர்கள். நாங்கள் இராக், ஈரான், துருக்கியை சேர்ந்தவர்கள் அல்லர். இந்துக்கள் எங்களுடைய சகோதரர்கள். ராமர் எங்கள் மூதாதையர். அவர் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அவர் எங்களுக்கு இறை தூதர் போன்றவர்’’ என்றார்
மற்றொரு முஸ்லிம் உறுப்பினர் ஷப்னா பேகம் கூறும்போது, ‘‘ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நானும் என்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளேன். வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து அமைதியை நிலைநாட்ட வேண்டும்’’ என்றார்.
சயீத் மொகமது இஷ்தியாக் மஹிளா மஹாவித்யாலயா தலைவர் டாக்டர் சயீத் ஹபீஸ் கூறும்போது, ‘‘ராமர் கோயில் கட்டும் நல்ல பணிக்கு நன்கொடை வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து முஸ்லிம் சகோதரர்களும் ராமர் கோயில் கட்டுமானத்துக்கு தாராளமாக நன்கொடை வழங்க வேண்டுகிறேன்’’ என்றார்.