இந்தியா

1,178 ட்விட்டர் கணக்குகளை நீக்க மத்திய அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போராட்டம் குறித்து பொய்யான மற்றும் ஆத்திரமூட்டும் தகவல்களை பரப்பியதற்காக 1,178 ட்விட்டர் கணக்குகளை நீக்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த 1,178 பேரும் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவு பயன்பாட்டாளர்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது. எனினும் மத்திய அரசின் உத்தரவுக்கு ட்விட்டர் நிறுவனம் இதுவரை முழுவதுமாக இணங்கவில்லை. முன்னதாக, கடந்த ஜனவரி 31-ம் தேதி, இதே காரணங்களுக்காக மத்திய அரசின் உத்தரவுப்படி 257 கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. ஆனால் சிலமணி நேரத்துக்கு பிறகு இந்த முடக்கத்தை ட்விட்டர் தன்னிச்சையாக நீக்கியது. விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் சிலர் அண்மையில் ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர். இந்தக் கருத்துகளுக்கு ட்விட்டர் நிறுவனத்தின் சர்வதேச தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி ‘லைக்’ தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவை ட்விட்டர் நிறுவனம் இதுவரை ஏற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

பிரபலங்களின் கருத்துகளுக்கு ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ‘லைக்’ தெரிவித்ததற்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்தது. ட்விட்டர் நிறுவனத்தின் நடுநிலைமை குறித்து அப்போது அரசு கேள்வி எழுப்பியதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT