"நாட்டில் பெருகி வரும் சகிப்பின்மை பாதுகாப்பு இல்லாத உணர்வை அளிக்கிறது. குழந்தைகள் நலன் கருதி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனக் கேட்கிறார் என் மனைவி"
டெல்லியில் பத்திரிகையாளர்களுக்கான ராம்நாத் கோயென்கா விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர் கான் இவ்வாறு பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது:
"நாட்டில் பெருகிவரும் சகிப்பின்மை அச்சுறுத்துவதாக இருக்கிறது. அன்றாடம் நடைபெறும் சகிப்பின்மை சார்ந்த சம்பவங்களை செய்தித்தாள்களில் வாசிக்கிறோம். தொலைக்காட்சிகளில் பார்க்கிறோம். இத்தகைய சம்பவங்களால் என் மனைவி கலக்கம் அடைந்துள்ளார். நானும் அச்சமடைந்துள்ளேன் என்பதை மறுப்பதற்கில்லை.
நாட்டில் பெருகி வரும் சகிப்பின்மை பாதுகாப்பு இல்லாத உணர்வை அளிக்கிறது. குழந்தைகள் நலன் கருதி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனக் கூறுகிறார்.
கடந்த 6 முதல் 8 மாதங்களாக நாட்டில் மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வு குறைந்துள்ளது. அச்ச உணர்வை அதிகரித்திருக்கிறது.
வீட்டில் என் மனைவியுடன் நான் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் என்னிடம் "நாம் இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாமா?" எனக் கேட்டார். குழந்தைகள் எதிர்காலம் கருதி இவ்வாறு கேட்பதாகக் கூறினார். ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை திறக்கவே அச்சமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு சமுதாயத்திலும் மக்களின் பாதுகாப்பு உணர்வு குறையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அதேபோல், நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் விதைக்கப்பட வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும்போது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி மக்கள் தங்கள் கைகளில் சட்டத்தை எடுக்கத் துணியும் போது அதை வன்மையாகக் கண்டிக்க வேண்டும், சட்ட நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். இவ்வாறு நடந்தால் பாதுகாப்பு உணர்வு இருக்கும். ஆனால், மக்கள் மத்தியில் அச்ச உணர்வே மிச்சமிருக்கிறது. காரணம் அரசுகள் சட்டத்தை மீறுபவர்களை தட்டிக் கேட்கவில்லை.
பெருகிவரும் சகிப்பின்மைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் பல எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும், திரைக் கலைஞர்களும் தங்கள் விருதுகளை திருப்பியளித்துள்ளனர். இது சரியான முடிவே. அவர்கள் தங்கள் எதிர்ப்பை சரியான முறையில் பதிவு செய்துள்ளனர்.
தாத்ரி சம்பவத்துக்குப் பின்னர் வெளியான சில அரசியல் தலைவர்களின் அறிக்கைகள் கண்டனத்துக்குரியவை. வன்முறை எந்த வடிவில் இருந்தாலும் அது கண்டனத்துக்குரியதே.
ஆட்சியில் யார் இருக்கிறார்கள் என்பது கேள்வியல்ல, அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்பது பற்றி கவலை இல்லை. ஆனால், வன்முறை நடக்கக் கூடாது. தொலைக்காட்சி விவாதங்களில் பலர் பாஜகவை குற்றஞ்சாட்டினர். அதற்கு பாஜகவினர் 1984 சீக்கிய கலவரம் குறித்து கேள்வி எழுப்பினர். இது சரியான அணுகுமுறை அல்ல. அரசியல்வாதிகளிடம் இருந்து நமபிக்கையளிக்கும் அறிக்கைகளையே மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
தாத்ரி சம்பவத்துக்குப் பிறகு அங்கு பல அரசியல்வாதிகள் படையெடுத்தனர். ஆனால், கர்னல் சந்தோஷ் மகாதிக் மறைவுக்கு பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கரைத் தவிர வேறு யாரும் செல்லவில்லை."
இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் ஆதரவு:
நாட்டில் சகிப்பின்மை பெருகிவருவதால் மக்கள் அச்ச உணர்வில் இருப்பதாக நடிகர் அமீர் கான் கூறிய கருத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறும்போது, "அமீர் கான் சொல்வதைத் தான் இந்தியா முழுமையும் சொல்கிறது, மொத்த உலகமும் சொல்கிறது. வலதுசாரி கொள்கை கொண்ட தலைவர்களும் இதையே சொல்கின்றனர்.
உண்மையை சொல்லியதற்காக அமீர் கான் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். அவரை விமர்சிப்பதை தவிர்த்து அவர் கூறிய கருத்துகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் செவி சாய்க்க வேண்டும்" என்றார்.
பிகே வெற்றிக்கு யார் காரணம்? - பாஜக
இந்தியாவில் சகிப்புத்தன்மை மேலோங்கி இருக்கிறது என்பதற்கு சர்ச்சைகள் நிரம்பிய ஆமீர் கானின் பிகே (PK) திரைப்படம் திரையரங்குகளில் தங்குதடையின்ற ஓடியதே நற்சான்றாகும் என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
அடிப்படைவாத அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் அந்த எதிர்ப்பையும் மீறி பிகே திரைப்படம் வசூல் சாதனை செய்ததே? திரையரங்குகளில் அரசு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததே?' என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.