அசாமில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎப்) கட்சியின் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான பத்ருதீன் அஜ்மல் பாஜகவுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறார்.
தென் மாநிலங்களில் முஸ்லிம்களிடம் கணிசமாக தனது செல்வாக்கை பெருக்கிக் கொண்டுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி போல வடகிழக்கு மாநிலங்களில் பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்களிடையே பிரபலமாகி வருகிறார் பத்ருதீன் அஜ்மல். அசாமில் இந்திய முஸ்லிம்களைத் தவிரபெங்காலி மொழி பேசும் முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். பல தொகுதிகளில் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு உள்ளனர். பெங்காலி மொழி பேசும் முஸ்லிமான பத்ருதீன் அஜ்மலுக்குஅவர்களிடையே நல்ல செல்வாக்கு உள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பத்ருதீன் அஜ்மலின் ஏஐயுடிஎப் கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றது. 2011 தேர்தலில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2016-ல் சற்று குறைந்து 13 இடங்களில் வெற்றி பெற்றாலும் பரவலாக பல தொகுதிகளில் ஏஐயுடிஎப் வாக்குகளை பெற்றது. பத்ருதீன் அஜ்மல் இப்போது துப்ரி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக உள்ளார். கடந்த மூன்றுமக்களவைத் தேர்தல்களில் துப்ரியில் இருந்து அவர் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 2016 தேர்தலுக்கு முன்பு வரை காங்கிரஸைப் பற்றி பாஜக கவலைப்படவில்லை. இப்போதும் அசாமில் காங்கிரஸ் பெரிய பலம் பெற்றுவிடவில்லை. ஆனால், காங்கிரஸைவிட பத்ருதீன் அஜ்மல்பற்றித்தான் பாஜக அதிகம் கவலைப்படுகிறது. பத்ருதீன், இப்போது பாஜகவின் தலைவலியாக உவெடுத்துள்ளார்.
பெங்காலி பேசும் முஸ்லிம்கள், மாநிலத்தில் பரவலாக உள்ளனர். பல தொகுதிகளில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். அவர் களிடம் தனது செல்வாக்கை பத்ருதீன் பெருக்கி வருகிறார். பாஜக, காங்கிரஸ் கட்சிகளை விமர்சித்து வருகிறார்.
அசாம் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 126 இடங்களில் தனிப்பெரும்பான்மைக்கு 64 இடங்கள் தேவை. நிச்சயம் 64 தொகுதிகளில் பத்ருதீன் கட்சி வெற்றி பெறப்போவது இல்லை. காங்கிரஸுக்கும் பெரும்பான்மை கிடைக்கும் அளவுக்கு பலம் இல்லை. ஆனால், ஏஐயுடிஎப் கட்சி 20 இடங்களில் வெற்றி பெற்றால் கூட பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க பத்ருதீனை முதல்வராக்க காங்கிரஸ் முடிவு செய்தால் என்ன செய்வது என்பதுதான் பாஜகவுக்கு இப்போது ஏற்பட்டுள்ள கவலை.
ஏற்கெனவே, குறைவான இடங்களில் வெற்றி பெற்றிருந் தாலும் கர்நாடகாவில் குமாரசாமிக் கும் மகாராஷ்டிராவில் சிவசேனாதலைவர் உத்தவ் தாக்கரேவுக்கும் முதல்வராக காங்கிரஸ் ஆதரவு அளித்தது. அதேபோல அசாமிலும் நடந்தால் என்ன செய்வது என்று பாஜக கவலைப்படுகிறது. விரைவில் சட்டப்பேரவைக்கு நடக்கப் போகும் தேர்தல் பாஜகவுக்கும் காங்கிரஸுக்குமான போட்டியாக இல்லாமல் பாஜகவுக்கும் பத்ருதீனுக்கும் இடையே நடக்க உள்ள போட்டியாக இருக்கும் எனக் கருதப்படுகிது.