ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மருத்துவக்கல்லூரி, தொழி்ல்நுட்பக் கல்லூரியில் மாணவர்கள் தாய்மொழியில் படிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு என பிரதமர் மோடி தெரிவித்தார்.
அசாம் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று அந்த மாநிலத்துக்குச் சென்றுள்ளார். அங்குள்ள சோனிட்பூர் மாவட்டத்தில் உள்ள தேகியாஜூலி எனும் இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
முன்னதாக, அசாம் மாநிலத்தில் 2 மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, அசாம் மாலா எனும் நெடுஞ்சாலைத் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
அதன்பின் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:
நான் இங்கு பங்கேற்கும் இந்தக் கூட்டம் நடக்கும் இடம் வரலாற்றிலேயே முக்கியமானது. இதுவரை இந்த இடத்துக்கு எந்தப் பிரதமர்களும் வரவில்லை.
சுதந்திரப்போராட்ட வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் 13 பேர் வீரமரணம் அடைந்த இடம் இதுவாகும். அகங்காரம் பிடித்தவர்களைத் தோற்கடித்த மண்ணில் வீர வணக்கம் செலுத்த எனக்கு இன்று வாய்ப்பு கிடைத்துள்ளது.
சுதந்திரம் அடைந்ததில் இருந்து 70 ஆண்டுகளாக அசாம் மாநிலத்துக்கு 6 மருத்துவக் கல்லூரிகள்தான் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாஜக அரசு வந்தபின் கடந்த 6 ஆண்டுகளில் 6 மருத்துவக் கல்லூரிகளை அமைத்துள்ளோம். ஒவ்வோர் ஆண்டும் 1,600 மருத்துவர்களை அசாம் மாநிலம் பெறும்.
தேசிய பாரத்மாலா திட்டத்தில் வரும் அசாம் மாலா திட்டத்தின் மூலம் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு நாட்டில் உள்ள 500 மாவட்டங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
உலகளவில் இந்தியவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் முயல்கிறார்கள். அதிலும் தேயிலையோடு தொடர்புபடுத்தி இந்திய அடையாளத்தைக் களங்கப்படுத்த சில வெளிநாட்டு சக்திகள் முயல்கிறார்கள், அவர்கள் இந்திய தேயிலையைக் கூட விட்டுவைக்கவில்லை. அவர்களின் சதித் திட்டம் தொடர்பான ஆவணங்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தாக்குதல்களை நீங்கள் ஏற்பீர்களா.
இந்த சதித்திட்டத்துக்கு ஆதரவாக இருப்போர், இந்தியத் தேயிலையின் நற்பெயரைக் கெடுக்க முயல்வோருக்கு நாம் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் பதில் அளிக்க வேண்டும். பட்ஜெட்டில், அசாம் தேயிலை மேம்பாட்டுக்கு ரூ.ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் ஏற்கெனவே 55 லட்சம் மக்கள் அரசின் மருத்துவ சுகாதார வசதிகளைப் பெற்றுள்ளார்கள் மக்களுக்குத் தேவையான மருத்து மையங்கள் மாநிலத்தின் அனைத்துஇடங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளன.
கரோனா காலத்தில் தடுப்பு நடவடிக்கைகளை இந்தியா சிறப்பாகச் செய்தது,தற்போது தடுப்பூசி போடும் செயல்பாடுகளை உலகமே இந்தியாவைப் புகழ்ந்து வருகிறது.
நாடு 75-வது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் வேளையில், என்னுடைய கனவு என்பது நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி அந்தந்த தாய்மொழியில் இயக்க வேண்டும் என்பதுதான்.மாணவர்கள் தாய்மொழியில் கற்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.