மதுவை தடைசெய்து மதுபானம் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டுமெனில் மதுவிலக்கு மட்டும் போதாது; மக்கள் மனமும் மாற வேண்டும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
மத்தியப்பிரதேசத்தின் காட்னி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் பேசியதாவது:
நாம் மத்தியப் பிரதேச மாநிலத்தை மதுபானம் இல்லாத மாநிலமாக மாற்ற விரும்புகிறோம். ஆனால் மதுவை தடை செய்வதனாலோ மதுவிலக்கு செய்வதனாலோ மட்டும் இதை செய்ய முடியாது. அதற்கு மக்கள் மனமும் மாற வேண்டும். அதை உட்கொள்ள மக்கள் தயாராக இருக்கும்வரை மதுபானமும் தொடர்ந்து கிடைக்கத்தான் செய்யும்.
எனவே மக்கள் மது அருந்துவதை நிறுத்தவேண்டும், நமது மாநிலத்தை ஒரு நல்ல மாநிலமாக மாற்றும் வகையில் மதுவிலக்கு பிரச்சாரம் ஒன்றை நாம் மேற்கொள்வோம். இதற்கு நாம் ஒரு தீர்மானத்தை முன்எடுக்க வேண்டும்.
மாநில அரசு மக்களுக்கு குடிநீரை வழங்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில், ஒவ்வொரு வீட்டிலும் குழாய்கள் மற்றும் குடிநீர் இருக்கும்.
நமது அரசின் சார்பாக ஏழை மக்களுக்கு பக்கா வீடுகள் கட்ட பணம் வழங்கப்படும். அதேபோல ஏழை மக்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைப்பதற்காக ரூ.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக சுமார் 3,25,000 ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்படவுள்ளன.
சொந்த மகள்களுடன் தவறான நடத்தைக்காக மரண தண்டனை அறிவித்த முதல் அரசாங்கம் மத்தியப் பிரதேசம். இது தவிர காட்னி மாவட்டத்தில் முஸ்கன் அபியான் திட்டத்தின் கீழ், 50 சிறுமிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதுவரை 37 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது, இருவர் கருணை மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.