இந்தியா

இந்தியாவின் கடும் எதிர்ப்பால் கச்சா எண்ணெய் விலை உயர்த்தவில்லை: ஓபெக் நாடுகள் கூட்டமைப்பு நடவடிக்கை

செய்திப்பிரிவு

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பு (ஓபெக்) ஆசிய பிராந்தியத்தில் விலையை உயர்த்தாமல் உள்ளன. அதேசமயம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் விலையை அதிகரித்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை முன்புஎப்போதும் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு பீப்பாய் விலை 60 டாலர் என்ற விலையை எட்டியது. இதனால் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியது.

கடந்த ஜனவரி 5-ம் தேதி கச்சா எண்ணெய் கூடுதல் உற்பத்தியை நிறுத்தப் போவதாக சவுதி அரேபியா அறிவித்தது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து ஜனவரி 19-ம் தேதி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விடுத்த அறிக்கையில், ‘‘எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படவில்லை’’ என்று தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் ஓபெக் கூட்டமைப்பின் செயலர் முகமது பார்கின்டோவும் பங்கேற்றிருந்தார். அட்லாண்டிக் கவுன்சில் கூட்டத்தில் இதுபோன்ற விலை நிர்ணயம் குழப்பத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.

கடந்த 2020 ஏப்ரலில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது சவுதி அரேபியாவுக்கு ஆதரவாக இந்தியா இருந்ததை தர்மேந்திர பிரதான் சுட்டிக்காட்டினார்.

ஜி20 நாடுகள் கூட்டத்திலும் இந்தியா ஆதரவு தெரிவித்தது என்றும், எரிபொருள் உற்பத்தியில் அதிகம் நுகரும் நாடாக இந்தியா விளங்குவதையும் அவர் குறிப்பிட்டார். மேலும் உற்பத்தியில் 70 சதவீதம் இந்தியா வாங்குவதையும் அவர் குறிப்பிட்டார்.

மார்ச் வரை தள்ளிவைப்பு

எண்ணெய் விலை அதிகரிப்பது இப்போதைய சூழலில் அரசு வரியைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றும் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார். இதையடுத்து மார்ச் வரை விலையை உயர்த்த வேண்டாம் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை ஓபெக் நாடுகள் ஏற்றுள்ளன.

SCROLL FOR NEXT