இந்தியா

கேரளாவுக்கு தங்கம் கடத்தி வர ஐக்கிய அரபு அமீரக ஆவணங்களை போலியாக பயன்படுத்தினர் என்ஐஏ குற்றப்பத்திரிகையில் தகவல்

செய்திப்பிரிவு

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களை போலியாக பயன்படுத்தி, கேரளாவுக்குதங்கம் கடத்தப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரக தூதரகமுகவரியில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கக் கட்டிகள் கடத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்தஎன்ஐஏ அதிகாரிகள், இக்கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி கேரள ஐ.டி. துறையில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், திருவனந்தரத்தில் உள்ள ஐக்கிய அரபு தூதரகத்தில் பணிபுரிந்த சரீத் குமார் உட்பட 20 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்செய்து வருகிறது. இந்த வழக்குதொடர்பாக என்ஐஏ அண்மையில்தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறியிருப்பதாவது:

ஐக்கிய அரபு தூதரகத்தில் பணிபுரிந்து வந்த சரீத் குமார், அங்குசரக்கு விமானங்களில் ஏற்றப்படும்பொருட்களை ஆய்வு செய்யும் பணியை செய்திருக்கிறார். அப்போது, ஐக்கிய அரபு தூதரகத்தில் இருந்து அனுப்பப்படும் சரக்குப் பெட்டிகள் சோதனைக்கு உட்படுத்தப்படாததை அவர் பார்த்திருக்கிறார். அப்போது, இந்த முறையைபயன்படுத்தி தங்கம் கடத்தும் யோசனை அவருக்கு வந்துள்ளது.

இதையடுத்து, 2019-ம் ஆண்டுசெப்டம்பரில் தனது பணியை ராஜினாமா செய்த சரீத், தனது இந்ததங்கக் கடத்தல் யோசனையைஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோருக்கு தெரிவித்துள்ளார். அதன்பின்னர், அவர்கள் இந்தக் கடத்தலில் இணைந்து செயல்படுவது என முடிவெடுத்துள்ளனர்.

தாம் பணியில் இருந்து விலகியபோது, ஐக்கிய அரபு தூதரகத்தின் அதிகாரப்பூர்வ கடிதம், அச்சு (சீல்) ஆகியவற்றை சரீத் எடுத்து வந்துள்ளார். இந்த ஆவணங்களை போலியாக பயன்படுத்தியே, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அவர்கள் கேரளாவுக்கு தங்கங்களை கடத்தி கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு, கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் முதல் கடந்த ஆண்டு ஜூன் வரையிலான கால கட்டத்தில் அவர்கள் 167 கிலோ 24 காரட் தங்கங்களை கடத்தி இருக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT