எனக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி சமூக ஊடகங்களில் செய்துவரும் பிரச்சாரத்தை உடனடியாக நிறுத்துமாறு தொழிலதிபதிர் ரத்தன் டாடா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10000 கோடி டாலர் மதிப்புள்ள டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா தொழிற்துறையைத் தாண்டி, பல்வேறு சமூகப்பணிகளிலும், இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். சமூகத்துக்கு ரத்தன் டாடாஆற்றியுள்ள பணிகளுக்காக அவருக்கு பாரத ரத்னா விருது மத்திய அரசு வழங்க வேண்டும் எனக் கோரி ட்வி்ட்டரில் ஹேஸ்டேக் வைரலானது.
#பாரதரத்னாஃபார்ரத்தன்டாடா என்ற ஹேஸ்டேக் வைரலாகி அதில் பலரும் ரத்தன் டாடாவுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தனர். அவர் சமூகத்துக்குச் செய்த பல சேவைகளைக் குறிப்பிட்டு அவருக்கு உயர்ந்த பாரதரத்னா விருது வழங்க வேண்டும் எனக் கோரி்க்கை விடுத்தனர்.
இதை அறிந்த தொழிலதிபர் ரத்தன் டாடா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு கோரிக்கை விடுப்பதை நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரத்தன் டாடா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ எனக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனக் கோரி சமூக ஊடகங்களில் சிலர் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். ஆனால், நான் பணிவுடன் விடுக்கும் கோரிக்கை என்னவெனில், இதுபோன்ற பிரச்சாரங்களைத் தொடராதீர்கள். நான் இந்தியனாக இருந்து, இந்தியாவுக்காக என்னால் முடிந்த பங்களிப்பை நாட்டின் வளர்ச்சிகாக அளிக்க முயற்சிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ட்விட்ரில் பலரும், சாதிக்கத் துடிக்கும் பல இளைஞர்களுக்கு ரத்தன் டாடா தூண்டுகோலாக இருக்கிறார், ஒருவரின் சுயதிறமை வாழ்க்கையில் இலக்கை அடைய உதவும் என்றும், இந்தியாவின் உண்மையான ஹீரோ டாடா என்றும் புகழ்ந்துள்ளனர்.
ரத்தன் டாடா தனக்காக யாரும் பிரச்சாரம்செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டபின், ட்விட்டரில் அவரைப் புகழ்ந்து இன்னும் கூடுதலாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன. டாடாவின் பெரும்தன்மை,தன்னடக்கம்தான் அவரை மேலும் உயர்த்துகிறது என்றும், யாருடனும் ஒப்பிடமுடியாத, சமனில் வைக்க முடியாத மனிதர் என்றும் புகழ்கின்றனர்.
கடந்த 2012-ம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவர் பதவியிலிருந்து ரத்தன் டாடா விலகியபின், தன்னிடமுள்ள சொத்துக்கள் மூலம் சுயமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி இளைஞர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார்.