விவசாயிகள் நடத்திவரும் அமைதியான போராட்டம் தேசிய நலனில் அக்கறை கொண்டது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங் களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், இன்று நாடு தழுவிய மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் இப்போராட்டம் நடைபெறும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.
நாடு தழுவிய அளவில் அனைத்து சாலைகளிலும் நெடுஞ்சாலைகளிலும் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் நிலையில் டெல்லியில் மட்டும் சுமார் 50,000 போலீஸ், துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்றைய தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
"நாட்டுக்கு உணவளிப்பவர்களின் அமைதியான சத்யாகிரகம் தேசிய நலனில் அக்கறை கொண்டது - இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகள்-தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் நாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும். எனவே விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவு!"
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டத்திற்கு காவல்பலப்படுத்தப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் இன்றைய தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளின் போராட்டக் களம் ஒன்றில் காவலதுறை அமைத்துள்ள பல அடுக்கு தடுப்புகளின் படத்தை வெளியிட்டுள்ளார்.
பல அடுக்கு தடுப்புகளைக் காட்டும் படத்துடன் "பயத்தின் சுவரால் எங்களை ஏன் பயமுறுத்துகிறீர்கள்?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
விவசாயிகள் தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்துள்ள நாடு தழுவிய '' சக்கா ஜாம் '' க்கு காங்கிரஸ் வெள்ளிக்கிழமை ஆதரவு வழங்கியது, போராடும் விவசாயிகளுடன் கட்சித் தொண்டர்கள் தோளோடு தோள் கொடுப்பார்கள் என்று காங்கிரஸ் தெரிவித்திருந்தது.