இந்தியா

கர்நாடகாவில் பருப்பு பறிமுதல் செய்ய எதிர்ப்பு: வர்த்தகர்கள் நாளை கடையடைப்பு

இரா.வினோத்

பருப்பு வர்த்தக நிறுவனங்களில் அரசு அதிகாரிகள் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பருப்பு வர்த்தகர்கள் கர்நாடகாவில் நாளை மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கர்நாடக தொழில் வர்த்தகசபைக் கூட்ட மைப்பின் தலைவர் ரமேஷ் சந்திர லஹோட்டி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறிய தாவ‌து:

கடந்த மாதத்தில் உளுந்து, துவரம் பருப்பு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே பருப்பை பதுக்கும் வர்த்தகர்கள் மீது மத்திய அரசும், மாநில அரசுகளும் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. கடந்த சில தினங்களில் மட்டும் கர்நாடகாவில் 1,300 கிடங்குகளில் அரசு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, 2.35 லட்சம் டன் பருப்பு பறிமுதல் செய்துள்ளனர்,

கர்நாடக அரசின் இத்தகைய திடீர் நடவடிக்கையால் பருப்பு வர்த்தகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் உரிமம் இல்லாமல் பருப்பு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்தவர்களுக்கே அரசு இன்னும் உரிமம் அளிக்கவில்லை.

எனவே பருப்பு வர்த்தகர் களுக்கு உரிமம் வழங்கும் வரை அரசு அதிகாரிகள் தங்களது திடீர் சோதனையை நிறுத்தக் கோரி. அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (வெள்ளிக்கிழமை) கர்நாடகாவில் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பருப்பு வர்த்தகர்கள் ஈடுபடுகின்றனர். எங்களது இந்த போராட்டத்துக்கு 144-க்கும் அதிகமான பருப்பு வர்த்தக அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன''என்றார்.

தீபாவளி திருவிழா நெருங்கி வரும் நிலையில் கர்நாடக பருப்பு வர்த்தகர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதால் பருப்பின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உளுந்து, துவரம் பருப்பு ஆகியவற்றின் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள கர்நாடகாவில் வேலை நிறுத்தம் ஏற்பட்டால் நாடு முழுவதும் உள்ள‌ சந்தைகளுக்கு பருப்பு வரத்து குறையும். இத்தகைய வேலை நிறுத்தம் உள்ளூர் சந்தைகளில் பருப்பு தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கர்நாடக உணவுத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறும்போது, ''பருப்பு வர்த்தகர்களின் வேலை நிறுத்தம் நியாயமற்றது. பருப்பை கிடங்குகளில் அளவுக்கு மீறி பதுக்கி வைத்து, செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வர்த்த கர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விலை உயர்வை திட்டமிட்டு உருவாக்கும் இத்த கைய வர்த்தகர்களின் கிடங்கு களில் அதிகாரிகளின் அதிரடி சோதனை தொடரும்''என்றார்.

2 கிலோ இலவசம்

கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் னிவாஸ் பிரசாத், ''தீபாவளி திருவிழாவை முன்னிட்டு வறுமை கோட்டுக்கு கீழே வாழும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பறி முதல் செய்யப்பட்ட 2.35 லட்சம் டன் உளுந்து, துவரம் பருப்பில் தலா 2 கிலோ துவரம் பருப்பு இலவசமாக விநியோகிக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT