சகிப்பின்மை விவகாரம் குறித்து பிரிட்டனில் செய்தியாளர்கள் சந்திப்பில் மோடி கூறிய கருத்து குறித்து காங்கிரஸ் கட்சி கூறும்போது, ‘எங்கு சென்றாலும் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை மோடிக்கு இருப்பது பரிதாபமே’ என்று தெரிவித்துள்ளது.
பிரதமர் பிரிட்டனில் கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, இந்தியாவில் சகிப்பின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை, அது காந்தி, புத்தர் பிறந்த மண். எனவே இந்தியா தனது அடிப்படை மதிப்பீடுகளுக்கு எதிரான எந்த ஒன்றையும் சகித்து கொள்ளாது. எனவே சட்டம் இந்த விவகாரங்களை கண்டிப்பான முறையில் கையாளும், தொடர்ந்து இதற்கு எதிராகச் செயல்படும்.
எனவே எந்த ஒரு சம்பவமும் 125 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கு முக்கியத்துவமாக இருந்தாலும் எங்களைப் பொறுத்தமட்டில் அனைத்து சம்பவங்களும் சீரியசானதே, என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் பி.சி.சாக்கோ கூறும்போது, “பிரதமர் மோடியிடம் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் அவர் இவ்வகையான கூற்றுகளை கூற வேண்டியிருப்பதே. ஆனால் அவர் இந்தியாவில் இத்தகைய கருத்துகளை கூறியிருக்க மாட்டார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எனவே நாட்டில் நடக்கும் சர்ச்சைக்குரிய சம்பவங்களுக்கு அவர் எங்கு சென்றாலும் விளக்கம் கொடுத்தேயாக வேண்டும். அவர் எங்கு சென்றாலும் மக்கள் அவரை சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றனர், எனவே அதனை களைவதற்கு அவர் விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
அவர் கருத்து கூற வேண்டிய கட்டாயத்தின் இன்னொரு காரணம் என்னவெனில், பாஜக ஆதரிக்கும் அடிப்படைவாத குழு மக்கள் உயிர்களூடன் விளையாடி வருகிறது, இதற்கு நிச்சயம் பிரதமர் பதிலளிக்க வேண்டியவராகிறார்” என்றார்.