இராக்கில் உள்நாட்டுச் சண்டையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பது மத்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
பாக்தாத்தில் ஷியா பிரிவினரின் ஆதிக்கத்தில் உள்ள அரசுக்கும் சன்னி பிரிவு தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. அல் காய்தா ஆதரவுடன் இயங்கும் தீவிரவாதிகள் பல்வேறு நகரங்களை கைப்பற்றியுள்ளனர்.
மோசுல் நகரிலிருந்து இந்தியாவைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் 40 பேரை தீவிரவாதிகள் கடத்தப்பட்டதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்த ஒமர் அப்துல்லா, "இராக்கில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழலில், அங்குள்ள இந்தியர்களை மீட்பது மத்திய அரசுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். எனினும், இவ்விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நான் நம்புகிறேன்.
இராக் நிலவரம் நேரடியாக நம் நாட்டின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இராக் உள்நாட்டு விவகாரத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும். அப்படி எண்ணெய் விலை அதிகரித்தால், இங்கு பணவீக்கமும் அதிகரிக்கும்" என்றார்.