இந்தியா

இந்தியாவுக்கு சுற்றுலா வந்தபோது வாரணாசியில் ரஷ்ய பெண் மீது ஆசிட் வீச்சு

ஏஎஃப்பி

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ரஷ்ய பெண் மீது ஆசிட் வீசிய நபரை வாரணாசி போலீஸார் தேடி வருகின்றனர்.

தார்யா யுரீவா (23) என்ற ரஷ்ய பெண், சுமார் 4 மாதங்களாக இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் ஒரு வீட்டில் கட்டண விருந்தினராக தங்கினார். இந்நிலையில் நேற்று அதிகாலை தார்யா தூங்கிக் கொண்டிருக்கும்போது, அவர் மீது வீட்டு உரிமையாளரின் மகன் ஆசிட் பாட்டிலை வீசினார். இதில் படுகாயம் அடைந்து அலறித் துடித்த தார்யா, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தப்பியோடிய வீட்டு உரிமையாளரின் மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண்கள் தாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம், இமயமலைப் பகுதியில் உள்ள தர்மசாலாவில் அமெரிக்க பெண் ஒருவர் தன்னை 2 நபர்கள் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.

கடந்த பிப்ரவரியில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ஜப்பானிய பெண் ஒருவர், சுற்றுலா வழிகாட்டி மீது பலாத்கார புகார் அளித்தார்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப் படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பாலியல் குற்றச் சாட்டுகள் தொடர்பாக மட்டும் நம் நாட்டில் கடந்த 2014-ல் 1,32,000 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 12,400 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் கடந்த ஆண்டு ஆசிட் வீச்சு தொடர்பாக மட்டும் 300-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.

SCROLL FOR NEXT