நாடு தழுவிய அளவில் அனைத்து சாலைகளிலும் நெடுஞ்சாலைகளிலும் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் நிலையில் டெல்லியில் மட்டும் சுமார் 50,000 போலீஸ், துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் வேளாண் சட்டங் களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், இன்று நாடு தழுவிய மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் இப்போராட்டம் நடைபெறும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங் களுக்கு எதிராக டெல்லி எல்லைப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக் கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பலசுற்று பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் விவசாய சங்கங்கள் இன்று நாடு தழுவிய அளவில் நடைபெறும் 'சக்கா ஜாம்' போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கான அறிவிப்பை கடந்த திங்கள் அன்று விவசாயிகள் அறிவித்தனர்.
இன்று நடைபெற உள்ள இப்போராட்டத்தின்போது விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக செங்கோட்டையில் கடுமையான அளவில் காவல் பணியாளர்களும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி மாநகரம், டெல்லி எல்லைகள் மற்றும் டெல்லி முழுவதுமான பகுதிகளில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக சுமார் 50,000 போலீஸ், துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் உள்ள 12 மெட்ரோ ரயில் நிலையங்களும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
மின்டோ பிரிட்ஜ் பகுதியில் தடுப்பு நடவடிக்கைகளுடன் போலீசார் நிறுத்தப்பட்டனர். போராட்டத்தில் புதியதாக யாரும் நுழையாமல் இருக்க ஒரு தடுப்பு நடவடிக்கையாக இப்பகுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. டெல்லியின் ஐ.டி.ஓ பகுதியில் காணப்பட்ட பொலிஸ் தடுப்புகளுக்கு மேல் முள் கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன.
போராட்டத்திற்கு முன்னதாகவே சாலைகளில் பல அடுக்கு தடுப்புகள் மற்றும் முள்வேலிகளை அமைத்து கூடுதல் படைகளை நிறுத்துவதன் மூலம் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.