இந்தியா

இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த ரிஹானாவின் நாட்டுக்கு தடுப்பூசி நன்கொடை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பார்படாஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து சமீபத்தில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டார். இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட உலக நாடுகளைத் தூண்டிவிடும் இந்தப் பதிவு குறித்து இந்தி நடிகை கங்கனா ரனாவத் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். ரிஹானாவின் செயல் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக கருதப்பட்டது.

இந்நிலையில், ரிஹானாவின் கருத்தைப் பற்றி கவலைப்படாமல் அவரது கருத்தைப் புறந்தள்ளி பார்படாஸ் நாட்டுக்கு, அந்நாட்டு பிரதமர் மியா அமோர் மோட்லி விடுத்த வேண்டுகோளை ஏற்று மனிதாபிமானத்துடன் 1 லட்சம் கோவிஷீல்டு கரோனா தடுப்பூசிகளை இந்தியா நன்கொடையாக அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவின் இந்தச் செயல் உலக நாடுகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு பார்படாஸ் பிரதமர் மோட்லி நன்றி தெரிவித்துள்ளார். மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில் , ‘கோவிஷீல்டு தடுப்பூசிகளை தாராளமாக நன்கொடையாக அளித்ததற்காக பிரதமர் மோடிக்கும் இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும், எனது அரசு சார்பாகவும் பார்படாஸ் மக்கள் சார்பாகவும் நன்றி தெரிவிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT