புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்குவிவசாயிகள் தூண்டப்படுகிறார் கள் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குற்றம் சாட்டினார்.
மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகடெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் மிகப்பெரிய வன்முறை நடந்ததில் 300-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர்காயமடைந்தனர். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தக்கோரி, எதிர்க்கட்சிகள் தொடர்ந்துஅமளியில் ஈடுபட்டன.
இதனைத் தொடர்ந்து, குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதம் நடத்துவதற்கு 5 மணி நேரத்தை ஒதுக்குவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்றுமுன்தினம் அறிவித்தார். அதன்படி, மாநிலங்களவையில் நேற்று இதுதொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியதாவது:
விவசாயிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்துவதற்காக கடந்த 6 ஆண்டுகளாக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் வரு மானத்தை இரட்டிப்பாக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதிப் பூண்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்காகவே 3 புதிய வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டன.
விவசாயிகளின் உழைப்பை இடைத்தரகர்கள் பல ஆண்டுகளாக சுரண்டி வருகின்றனர். இதனால், உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது விவசாயிகளுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. இந்த அவல நிலையை போக்குவதற்காக, புதிய வேளாண் சட்டங்களில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக, விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை விற்பனை செய்வதற்கு மண்டிகளை மட்டுமே நம்பியிருக்கும் சூழலுக்கு இந்த சட்டங்கள் முற்றுப்புள்ளி வைக்கின்றன. தகுந்த விலை கொடுக்கும் சந்தைகளில் தங்கள் விளைப்பொருட்களை விற்பதற்கு இந்த சட்டங்கள் ஏராளமான வாய்ப்புகளை வழங்கியுள்ளன.
அவ்வாறு, மண்டியை தவிரமற்ற சந்தைகளில் விளைப்பொருட்களை விற்பனை செய்வதற்கு எந்த வரியையும் அரசு விதிக்கவில்லை. ஆனால், மண்டிகளில் விளைப் பொருட்களை விற்க மாநில அரசுகள்தான் வரி விதிக்கின்றன. நியாயமாக பார்த்தால், மாநில அரசுகள் விதிக்கும் வரியை எதிர்த்துதான் விவசாயிகள் போராடி இருக்க வேண்டும்.
விவசாயிகளின் வருமானத்தை பல மடங்கு உயர்த்த வழிவகை செய்யும் இந்த சட்டங்கள், அவர்களை சுரண்டி வந்த இடைத்தரகர்களுக்கும், அவர்களுக்கு சாதகமாக இருந்த சில கட்சிகளுக்கும் எட்டிக்காயாக கசக்கின்றன. இச்சட்டங்கள் அமலுக்கு வரும் பட்சத்தில், தங்களால் இனி விவசாயிகளை சுரண்ட முடியாது என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டனர். இதன் காரணமாகவே, புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளை அவர்கள் தூண்டி வருகின்றனர்.
குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை ஒழிக்கப்பட்டுவிடும்; மண்டிகள் மூடப்படும்; நிலங்கள் பறிபோய்விடும் போன்ற பொய்களை கூறி விவசாயிகளை அவர்கள் அச்சுறுத்தி வருகின்றனர். இந்தப் பொய் பிரச்சாரத்தை நம்பி விவசாயிகளும் போராடிவருகின்றனர். இந்த சட்டங்களில்எங்கேனும் ஒரு இடத்திலாவது, இதுபோன்ற அம்சங்கள் இடம்பெற்றிருப்பதை எதிர்க்கட்சி களாலும், விவசாய சங்கங்களாலும் காண்பிக்க முடியுமா?
இந்தப் போராட்டம் ஒரு மாநிலத்துக்கு உட்பட்ட விவசாயிகளால் மட்டுமே நடத் தப்படுகிறது. இவ்வாறு தோமர் கூறினார்.
அமித் ஷா – தோவல் சந்திப்பு
விவசாயிகளின் நெடுஞ்சாலை மறியல் போராட்டம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
போராட்டத்தில் ஈடுபட்டால் இனி அரசு பணி கிடையாது
பாட்னா / டேராடூன்: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்தப் போராட்டம் பிஹார், உத்தராகண்ட் மாநிலங்களிலும் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாக உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக உத்தராகண்ட் மாநில டிஜிபி அசோக் குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், டேராடூனில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறும்போது, ‘‘உத்தராகண்டை சேர்ந்தவர்களின் சமூக வலைதளப் பதிவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இவற்றில், தேசம் மற்றும் சமூகத்துக்கு எதிரான கருத்துகளை பதிவிடுபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும். பாஸ்போர்ட், துப்பாக்கி உரிமம் ஆகியவற்றை கோரி விண்ணப்பிக்கும் போது, சம்பந்தப்பட்ட நபர்களின் சமூக வலைதள விவரங்களும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்’’ என்றார்
பிஹார் டிஜிபி எஸ்.கே.சிங்கால் நேற்று பிறப்பித்த உத்தரவில், “போராட்டம் அல்லது சாலை மறியல்களில் ஈடுபடும் நபர்களின் விவரங்கள் போலீஸாரால் சேகரிக்கப்படும். அரசு நிறுவனங்கள் அல்லது அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிகள், துப்பாக்கி உரிமம், பாஸ்போர்ட், நற்சான்றிதழ் உள்ளிட்டவற்றுக்கு விண்ணிப்பிக்கும் போது இந்த விவரங்களும் ஆய்வு செய்யப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.