இந்தியா

பிரதமர் மோடியின் அண்ணன் மகளுக்கு குஜராத் மாநகராட்சி தேர்தலில் ‘சீட்’ மறுப்பு

செய்திப்பிரிவு

குஜராத் மாநில மாநகராட்சி தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் அண்ணன் மகளுக்கு ‘சீட்’ மறுக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், ஜாம்நகர், பாவ்நகர் ஆகிய 6 மாநகராட்சிகளுக்கு, வரும் 21-ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தவிர 81 நகராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துகள், 231 தாலுகா பஞ்சாயத்துகளுக்கு 28-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல்களில் போட்டி யிட, பாஜக சார்பில் 576 வேட் பாளர்களின் இறுதிப்பட்டியல் கடந்த வியாழக்கிழமை வெளி யிடப்பட்டது.

இந்நிலையில், அகமதாபாத் மாநகராட்சியின் பொடக்தேவ் வார்டு தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட, பிரதமர் மோடியின் அண்ணன் பிரகலாத் மோடியின் மகள் சோனால் மோடி சீட் கேட்டிருந்தார். ஆனால், பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் சோனால் பெயர் இடம்பெறவில்லை. அகமதாபாத்தில் நியாய விலை கடை நடத்தி வருகிறார் சோனால். 30 வயதாகும் இவர் குஜராத் நியாய விலை கடைகள் சங்க தலைவராகவும் இருக்கிறார்.

‘‘நான் பிரதமர் மோடியின் உறவினர் என்ற முறையில் சீட் கேட்கவில்லை. பாஜக தொண்டர் என்ற முறையில் சீட் கேட்டேன். தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு மறுத்தாலும், பாஜக.வுக்காக துடிப்புடன் தொடர்ந்து பணியாற்றுவேன்’’ என்று சோனால் கூறினார்.

இதுகுறித்து குஜராத் பாஜகதலைவர் சி.ஆர்.பாட்டில் கூறும்போது, ‘‘பாஜக தலைவர்களின் உறவினர்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கக் கூடாது.60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சீட் வழங்க கூடாது. 3 முறைகவுன்சிலர் பதவி வகித்தவர்களுக்கு சீட் வழங்க கூடாது என்று கட்சி முடிவெடுத்துள்ளது. அதற்கேற்ப விதிமுறைகளும் மாற்றப்பட்டுள்ளன. அந்த விதிகள் அனைவருக்கும் ஒன்றுதான்’’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT