பிரதமர் மோடியை நீக்கினால்தான், இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் பேசியதற்கு பாஜக, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் உட்பட பலதரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து ஒளிபரப் பாகும் ‘துனியா’ என்ற செய்தி தொலைக்காட்சியின் விவாதத்தில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் பங்கேற்றார். அப்போது, “இந்தியா - பாகிஸ் தான் இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடக்க வேண்டு மானால், பிரதமர் பதவியில் இருந்து மோடியை நீக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும். அதற்கு இன்னும் 4 ஆண்டுகள் பாகிஸ்தான் காத்திருக்க வேண் டும்” என்று மணிசங்கர் பேசினார்.
இதற்கு பாஜக, லாலுவின் ராஷ் டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாஜக செய்தித் தொடர்பாளர் நளினி கோலி நேற்று கூறும்போது, “முதலில் சல்மான் குர்ஷித் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இப்போது மணிசங்கர் அய்யர் பேசியுள்ளார். நாட்டுக்கு எதிராகவும், தீவிரவாதத்தை தூண்டும் வகையிலும் அவர் பேசிய பேச்சுகள் அபாயகரமானவை. கவலை அளிக்கக் கூடியவை. இந்த விஷயத்தில் சோனியாவும் ராகுல் காந்தியும் தங்கள் நிலை என்ன என் பதை விளக்க வேண்டும்’’ என்றார்.
மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது: ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை மக்கள் தூக்கியெறிய வேண்டும் என்று வெளிநாட்டில் இருந்து பேசுவது தேசத்துரோகம். மணிசங்கர் அய்யரின் பேச்சு நாட்டுக்கு எதிரானது. அவர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி பேசியவர் சாதாரணமானவர் அல்ல. மத்திய அரசில் அமைச்சராக இருந்தவர். காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர். எனவே, இதை விட்டுவிட முடியாது.
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. மோடி தனது பணியை மிகச்சிறப்பாக செய்து வருகிறார். பாகிஸ்தான் உட்பட எல்லா அண்டை நாடுகளுடனும் நல்லுறவு வைத்துக்கொள்ளவே இந்தியா விரும்புகிறது. அதற்காக பாகிஸ்தான் பிரதமரை, தனது பதவியேற்புக்கு அழைத்தவர் மோடி. ஆனால் துரதிருஷ்டவசமாக தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலமும், நிதியுதவியும் வழங்கி வருகிறது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தான், இந்தியா - பாகிஸ்தான் உறவு மேம்படும் என்று மணி சங்கர் அய்யர் நினைத்தால், அதை கடந்த 50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் செய்திருக்கலாமே? காஷ்மீர் பிரச்சினையை காங்கிரஸ் ஆட்சியில் தீர்த்து வைத்திருக்கலாமே? இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.
பாஜக மூத்த தலைவர் ஜவேடகர் கூறும்போது, “மணி சங்கர் அய்யரின் பேச்சை காங்கிரஸ் ஏற்றுக் கொள்கிறதா? சல்மான் குர்ஷித், அய்யர் ஆகியோரின் பேச்சுக்கு கட்சித் தலைவர் என்ற முறையில் அவர்களுடைய பேச்சுக்கு பொறுப்பேற்று சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த மனோஜ் கூறும்போது, “மழலையர் பள்ளியில் படிக்கும் குழந்தை கூட இதுபோல் பேசாது” என்றார்.
இந்நிலையில் மணிசங்கர் அய்யர் அவ்வாறு பேசவில்லை என்று கூறியதாக காங்கிரஸ் தெரி வித்துள்ளது. இதுகுறித்து காங் கிரஸ் மூத்த தலைவர் டாம் வடக்கன் கூறும்போது, “மணிசங்கர் அய்யர் மீது கூறப்படும் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது. தான் அப்படி எதுவும் பேசவில்லை என்று அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்” என்றார்.