பெங்களூரைச் சேர்ந்த முகமது அப்துல் அஹாத் அமெரிக்காவில் படித்த கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஆவார். கடந்த ஆண்டு இவர் துருக்கி அதிகாரிகளிடம் சிக்கினார். பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடுகடத்தப்பட்டார்.
ஐஎஸ். தீவிரவாத அமைப்பில் சேரும் எண்ணத்துடன் இவர் துருக்கி சென்றாரா என்பது பற்றி சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இவர் தனது லேப்டாப்பில் தான் தலைமறைவானால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மனைவிக்கு சில ஆலோசனைகளை விட்டுச் சென்றுள்ளார்.தன் மனைவிக்கு, குடும்பச் செலவுகள், மகள் திருமணம் உள்ளிட்ட குடும்ப விஷயங்கள் குறித்து பலவிதமான குறிப்புகளை விட்டுச் சென்றுள்ளார்.
அதாவது பணம் சேமிப்பது எப்படி, முக்கியமான தொலைபேசி எண்கள், நம்பத்தகுந்த நபர்களின் பெயர்கள், மகள் திருமணத்தை நடத்துவது எப்படி, நிதியுதவி பெற யாரை அணுகுவது ஆகிய விவரங்களை தன் மனைவிக்காக விட்டுச் சென்றுள்ளார் அப்துல் அஹாத்.
ஆனால் சந்தேகத்தை ஏற்படுத்திய ஒரு தகவலும் அவரது லேப்டாப் குறிப்பில் காணப்பட்டது, “நான் எங்கிருக்கிறேன் என்பதைக் கண்டுபிடிக்க போலீஸையோ, சட்ட அமலாக்க பிரிவினர் யாரையுமோ அணுகக் கூடாது. நான் சிறையில் இருந்தால் என்னை விடுவிக்க எந்த ஒரு வழக்கறிஞரையும் சந்திக்கக் கூடாது. நான் தொலைபேசியில் இதற்கான உத்தரவுகளை இட்ட பிறகு இவர்களை அணுகலாம். நீயாக எதுவும் செய்து விடாதே” என்று எச்சரிக்கப் பட்டிருந்தது.
தன் மனைவி எந்த ஒரு உறவினரையும் சந்திக்கக் கூடாது என்றும் அவர் தடை விதித்திருந்தார், “யாருடனாவது ஆலோசனை நடத்த வேண்டுமென்றால் உனக்கு அனுமதி உண்டு, ஆனால் நல்ல இமான் அல்லது தக்வாவையே சந்திக்க வேண்டும்.
மேலும், விற்க வேண்டிய வீட்டுப் பொருட்களை அஹாத் தனித்தனியே கட்டி வைத்து லேபிளையும் ஒட்டி, அதன் விலையையும் அதில் குறிப்பிட்டுள்ளார் அஹாத்.
மேலும் தான் இல்லாவிட்டால் குடும்ப செலவுகள் 20% குறையும் என்றும், தன்னுடைய மொபைல் இணைப்பை ரத்து செய்து விட்டால் மாதம் 500-600 ரூபாய் மிச்சமாகும் என்றும், இதற்காக வோடஃபோன் இணையதளத்தை எப்படி அணுகுவது உட்பட அனைத்து தகவல்களையும் குறிப்புகளாக எழுதி விட்டுச் சென்றுள்ளார் அஹாத்.
மலிவான வீட்டுக்குச் செல்வது, லைட், ஃபேன்களை உரிய நேரத்தில் சுவிட்ச் ஆஃப் செய்து மின்சார கட்டணத்தை எப்படி குறைக்கலாம் வீட்டுப் பணியாள் தேவையில்லை என்றெல்லாம் அவர் அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
தங்க பிஸ்கட்டை விற்று மகளுக்கு திருமணம் செய்து முடித்து, தன் மனைவி வீட்டிலிருந்த படியே புதிய வர்த்தகம் ஒன்றை தொடங்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இத்தகைய ஆலோசனைகளுடன் 3,000 டாலர், தங்க பிஸ்கட், ஆகியவற்றுடன் மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் டிசம்பர் 23, 2014-ல் துருக்கிக்கு பயணித்தார்.
அங்குதான் இவர் சிரியா எல்லையருகே துருக்கிய அதிகாரிகளால் பிடிக்கப்பட்டார், இந்திய அதிகாரிகள் இவரை விசாரித்த போது சிரியாவுக்கு சென்ற நோக்கம் என்ன என்று அவரால் தெளிவாக எதையும் கூற முடியாததால் சந்தேகம் வலுப்பெற்றது.