இந்தியாவில் 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 5 பேரில் ஒருவர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி இருக்கக்கூடும். ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 21.5 சதவீதம் அதாவது 27 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஐசிஎம்ஆர் நடத்திய 3-வது செரோ சர்வேயில் தெரியவந்துள்ளது.
இது கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் 3 மடங்கு பாதிப்பு அதிகம், 2020 மே மாதத்தோடு ஒப்பிடுகையில் 30 மடங்கு அதிகமாகும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர் அமைப்பு ஏற்கெனவே கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக இரு செரோ சர்வே நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது 3-வது செரோ சர்வேயாகும். இந்த செரோ சர்வே 21 மாநிலங்களில் உள்ள 70 மாவட்டங்களில் நடத்தப்பட்டது.
இந்த செரோ சர்வே குறித்து ஐசிஎம்ஆர் அமைப்பின் இயக்குநர் மருத்துவர் பல்ராம் பார்கவா நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
''ஐசிஎம்ஆர் சார்பில் 3-வது செரோ சர்வே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 5 பேரில் ஒருவர் கரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கக்கூடும். ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 21.5 சதவீதம், எண்ணிக்கை அடிப்படையில் 27 கோடி பேர் கரோனாவில் பாதிப்புக்கு ஆளாகி இருக்கலாம்.
இந்த ஆய்வின் மூலம் தெரியவரும் செய்தி என்னவெனில் இன்னும் மிகப்பெரிய அளவிலான மக்கள் பாதிப்புக்கு ஆளாக வாய்ப்பிருக்கிறது. தடுப்பூசி என்பது அவசியமானது. முகக்கவசம் அணிதல், சமூக விலகல், கைகள் சுத்தம் ஆகியவற்றில் எந்த சமரசமும் கூடாது.
கிராமப்புறங்களில் கூட கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களில் மக்கள் அடர்த்தி குறைவு என்பதால் பரவல் வேகம் குறையும் என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிட்டது, எதிர்காலத்தில் வராது என்பதில்லை. ஆதலால், நகரங்களை விட கிராமங்களில் உள்ள மக்களுக்குத் தடுப்பூசி அளிப்பதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்''.
இவ்வாறு பல்ராம் பார்கவா தெரிவித்தார்.
மூன்றாவது செரோ சர்வே முடிவின்படி, 27 கோடி பேர் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்றாலும், இந்தியாவில் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் மட்டுமே பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்தே இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவது தெரிகிறது. இந்தியாவில் நேற்று 12,899 பேர்தான் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 1.6 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதற்கு முன் நடத்தப்பட்டசெரோ சர்வேயில் கிராமப் பகுதிகளில் 5.2 சதவீதம் பேருக்கு ஆன்ட்டிபாடிஸ் (நோய் எதிர்ப்பு சக்தி) உருவாகி இருப்பது தெரியவந்தது. ஆனால், சமீபத்திய சர்வேயில் அது 19 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நகர்ப்புறம் மற்றும் நகர்ப்புறங்கள் அல்லாத குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. முன்பு 16 சதவீதம் இருந்த நிலையில் தற்போது 31 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நகர்ப்புறங்கள், குடிசையில்லாத பகுதிகளில் வாழும் மக்களில் 9 சதவீதம் பேர் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களாக இருந்த நிலையில், தற்போது 26 சதவீதம் பேராக அதிகரித்துள்ளது.
18 வயது முதல் 44 வயதுடைய மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி 19.9 சதவீதம் இருக்கிறது, 10 வயது முதல் 17 வயதுள்ள பிரிவினரிடையே நோய் எதிர்ப்பு சக்தி 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே 23 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2-வது செரோ சர்வேயில், குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரிடையே நோய் எதிர்ப்பு சக்தி 5.4 சதவீதமும், 18 முதல் 44 வயது பிரிவினரிடையே 6.9 சதவீதம் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனையில் பணியாற்றும் 7,171 சுகாதாரப் பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட ஆய்வில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 26 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது தெரியவந்தது. பாராமெடிக்கல் பணியாளர்களுக்கு 25.4 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.