விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், டெல்லி போலீஸார், துணை ராணுவப்படையினர் பயன்படுத்த வழங்கப்பட்டிருந்த 350 அரசுப் பேருந்துகளை திரும்பப் பெறுமாறு டெல்லி போக்குவரத்துக்கழகத்துக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லி, உ.பி.எல்லை, டெல்லி-ஹரியானா எல்லையில் போராடும் விவசாயிகளைச் சுற்றி டெல்லி போலீஸாரும், துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டதற்கு எதிராக இந்த முடிவை டெல்லி அரசு எடுத்துள்ளது.
இதுகுறித்து டெல்லி போக்குவரத்துக் கழகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ விவசாயிகள் போராடும் இடத்துக்கு செல்ல டெல்லி போலீஸார், துணை ராணுவப்படையினருக்கு 576 பேருந்துகளில் 360 பேருந்துகளை வழங்கியிருந்தோம்.
ஆனால், சிறப்பு வாடகை மூலம் அனுப்பப்பட்ட அந்த பேருந்துகளை உடனடியாக வாபஸ் பெற்றுள்ளோம். 216 பேருந்துகள் மட்டும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. வழக்கமாக 100 பேருந்துகள் மட்டுமே டெல்லி போக்குவரத்துக் கழகம் வழங்கும். ஆனால், இந்த முறை 576 பேருந்துகளை வழங்கியது. இந்த பேருந்துகளை திரும்பப் பெற அரசு முடிவு செய்ததைத்தொடர்ந்து 350 பேருந்துகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
பாஜக கண்டனம்
டெல்லி ஆம் ஆத்மி அரசு, பேருந்துகளை திரும்பப் பெற்ற முடிவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் இயங்கும் ஆம் ஆத்மிஅரசு, போலீஸார், துணை ராணுவப்படையினருக்கு வழங்கிய பேருந்துகளை திரும்பப் பெற்றுள்ளது.
பஞ்சாப் தேர்தல் நோக்கோடு செயல்படும் ஆம்ஆத்மி கட்சியை நினைத்து டெல்லி மக்கள் வேதனைப்படுகிறார்கள். பாதுகாப்பில் ஈடுபட்டுவரும் போலீஸாருக்கு வழங்கப்பட்ட பேருந்துகளை ஆம் ஆத்மிஅரசு திடீரென்று வாபஸ் பெருவது அராஜகம்” எனத் தெரிவித்தார்.
டெல்லி எம்.பி. மீனாட்சி லெகி கூறுகையில் “ கேஜ்ரிவால் அரசு பேருந்துகளை திரும்பப் பெற்றது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தைசிதைப்பதாகும். அரசியல் நோக்கோடு கேஜ்ரிவால் நடவடிக்கை எடுத்துள்ளார். பஞ்சாப் தேர்தலை மனதில் வைத்து அவர் இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.