இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட நிழல் உலக தாதா சோட்டா ராஜன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மும்பை செம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர சதாசிவ நிக்கல்ஜி (55). கடந்த 1970-களில் மும்பை நிழல் உலகில் கால் பதித்த அவர், பிரபல தாதா ராஜன் என்பவருடன் இணைந்து செயல்பட்டார். ராஜனின் மறைவுக்குப் பிறகு சோட்டா ராஜன் என்று அழைக்கப்பட்ட நிக்கல்ஜி பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டார்.
பின்னர் தீவிரவாதி தாவூத் இப்ராஹிம் வலதுகரமாக மாறிய அவர் மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு தனியாகப் பிரிந்தார். 1995-ல் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிய அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக வாழ்ந்தார்.
அவரை கொலை செய்ய தாவூதின் ஆட்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்து தப்பிய சோட்டா ராஜன் கடந்த ஓராண்டாக ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார். இதை இந்திய உளவுத் துறையினர் மோப்பம் பிடித்தனர். அவர்களின் தகவலின்பேரில் கடந்த 25-ம் தேதி இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு வந்த சோட்டா ராஜனை இன்டர்போல் போலீஸார் கைது செய்தனர்.
அவரை இந்தியாவுக்கு அழைத்து வர 6 பேர் கொண்ட சிபிஐ குழு பாலிக்கு சென்றது. கடந்த செவ்வாய்க்கிழமையே அவர் டெல்லிக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாலி பகுதியில் உள்ள எரிமலை வெடித்து தீக்குழம்புகளை கக்கியதால் அங்குள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு பாலி விமான நிலையம் நேற்று திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் சோட்டா ராஜனை சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வருகின்றனர்.
பாலியின் நகுரா ராய் சர்வதேச விமான நிலையத்தில் வியாழன் இரவு 7.45 மணிக்கு சிறப்பு விமானம் டெல்லி புறப்பட்டது.
முன்னதாக நகுரா ராய் விமான நிலையத்தில் நிருபர்களிடம் சோட்டா ராஜன் கூறியபோது, தாவூத் இப்ராஹிமை தேடும் பணியில் இந்திய உளவுத் துறையினருக்கு உதவியாக இருப்பேன், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாய் நாடு திரும்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் எந்த குற்றமும் செய்யவில்லை. என் மீது பதிவு செய்யப்பட்டவை பொய் வழக்குகள் என்று அவர் தெரிவித்தார்.
சோட்டா ராஜன் மீது மும்பை, டெல்லி போலீஸ் நிலையங்களில் 75 வழக்குகள் உள்ளன. அவற்றில் 20 கொலை வழக்குகளும் அடங்கும்.
போலி பாஸ்போர்ட் விசாரணை
இந்தோனேசியாவில் சோட்டா ராஜனை கைது செய்யபோது அவர் மோகன் குமார் என்ற பெயரில் பாஸ்போர்ட் வைத்திருந்தார். கர்நாடக மாநிலம் மண்டியா பகுதி முகவரியில் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருந்தது. அவர் எவ்வாறு போலி பாஸ்போர்ட் பெற்றார் என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை செய்திதொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.