*
பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் 6 நாட்களுக்கு சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 30-ம் தேதி முதல் டிசம்பர் 5-ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இருப்பினும், தயாநிதி மாறனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதிகள் சிபிஐக்கு அனுமதி மறுத்துவிட்டனர்.
கடந்த 2004-07 காலகட்டத்தில், தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, 300-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சிபிஐ விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் தயாநிதி மாறனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் 7 நாட்களுக்கு சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டனர். அதேவேளையில் அவரது இடைக்கால ஜாமீனை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.