இந்தியா

சமையல் எரிவாயு விலை உயராது: பெட்ரோலியத்துறை இணையமைச்சர் உறுதி

செய்திப்பிரிவு

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயராது, அவற்றுக்கான அரசு மானியங்கள் தொடரும் என மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) தர்மேந்தரா பிரதான் அறிவித்துள்ளார்.

இது பற்றி செய்தியாளர்களிடம் தர்மேந்திரா வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘நுகர்வோருக்கு அளிக்கப்பட்டுவரும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயராது. தற்போதுள்ள விலையே தொடரும். அவற்றின் மீதான மானியங்களும் தொடரும். மானிய சிலிண்டர்களின் எண்ணிக் கைகளும் மாற்றம் இன்றித் தொடரும்’ எனத் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை

பிஹார் மாநிலத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் நிலைகளை ஆராய, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் தர்மேந்திரா ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்துக் கூறுகையில், “பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வு ஒரு பெரிய பிரச்சினை. அதன் மீதான அரசின் கவனம் தொடர்கிறது.

மார்க்கெட் நிலவரத்தை பொறுத்தவரை கடந்த 2006 முதல் பெட்ரோலின் விலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இதில், டீசலின் விலை, மானியங்கள் மூலமாக கட்டுக்குள் உள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயுவின் உற்பத்தியை பெருக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. இது குறித்து அரசு, விவசாயிகள் மற்றும் ஏழைகள் ஆகியோர் பாதிக்கப்படாதபடி ஒரு கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது.’ என கூறினார்.

சமையல் எரிவாயு விநியோகஸ்தர் வரவேற்பு

மத்திய அமைச்சரின் அறிவிப்பை, அகில இந்திய எல்.பி.ஜி விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு (ஏ.ஐ.எல்டி.எப்) வரவேற்றுள்ளது. இது குறித்து ‘தி இந்து’விடம் அதன் பொதுச்செயலாளர் சந்திர பிரகாஷ் கூறுகையில், ‘சமையல் எரிவாயு விலையை உயர்த்த மாட்டோம் என புதிய அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.

தற்போது வருடத்திற்கு 12 என தொடரும் மானிய சிலிண்டர்களின் பயன்பாடு நம் நாட்டில் 70 சதவிகிதத்திற்கு குறைவாகவே உள்ளது. எனவே அதன் தேவைகள் இல்லாத இடங்களை கண்டறிந்து எண்ணிக் கையை குறைத்தால் அரசிற்கு பலனாக இருக்கும்.’ என்றார்.

கடந்தமுறை ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, வருடத்திற்கு ஆறு மானிய சிலிண்டர்கள் என இருந்ததை பனிரெண்டாக கடந்த மார்ச் மாதம் உயர்த்தியது. பாஜக தேர்தல் பிரச்சாரத்தின்போது, நுகர்வோரின் தேவைக்கேற்ப முன்னர் இருந்ததைப்போல் மானிய சிலிண்டர்கள் வழங்கப் படும் என வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT