தூய்மையான இமயமலை குறித்த விழிப்புணர்வுக்காகவும், பெண்கள் அதிகாரத்தை ஊக்குவிப்பதற்காகவும் இரு பெண்கள் பஞ்சாப்பிலிருந்து 5,000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
பெண்கள் அதிகாரம் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் பஞ்சாப்பில் இருந்து அருணாச்சலப் பிரதேசம் வரை சைக்கிளிலேயே செல்கின்றனர். அதன் பின்னர் தூய்மையான இமயமலை குறித்த விழிப்புணர்வுக்காக அங்கிருந்து உத்தரகாண்ட் வரை செல்கின்றனர்.
பிஹார் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இரு பெண்களின் லட்சிய சைக்கிள் பயணத்தை வாகா எல்லையில் டைரக்டர் ஜெனரல் (டிஐஜி), பி.எஸ்.எஃப், பூபிந்தர் சிங் நேற்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து இரு பெண்களில் ஒருவரான சுருதி ராவத் கூறியதாவது:
"நான் உத்தரகாஷி மாவட்டத்தைச் சேர்ந்தவள். உத்தரகாண்ட் அரசு எங்களுக்கு ஆதரவளிக்கிறது. பெண்கள் அதிகாரம் பற்றிய செய்தியைப் பரப்புவதே எங்கள் நோக்கம். இதற்காக நாங்கள் அருணாச்சல் வரை செல்வோம். அடுத்ததாக அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து ஒரு பயணம். ஒரு டிரான்ஸ் இமயமலை சைக்கிள் பயணத்தை அங்கிருந்து நாங்கள் தொடங்குகிறோம்.
இது தூய்மையான இமயமலை குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டது. எங்கள் பயணத்தின்போது நாங்கள் வெவ்வேறு நபர்களுடன் தொடர்புகொள்வோம். வாகா எல்லையிலிருந்து 5,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உத்தரகாண்டில் இந்தப் பயணம் முடிவடையும். எங்களின் பயணம் நாட்டின் எட்டு மாநிலங்களில் இருந்து செல்லும்''.
இவ்வாறு சுருதி ராவத் தெரிவித்தார்.
சுருதி ராவத்துடன் நீண்டதூர சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள இன்னொரு பெண் சவிதா மஹ்தாவ். இவர் பிஹாரைச் சேர்ந்தவர். சவிதா கூறுகையில், "தாய் பூமியைச் சுத்தமாகவும், மாசு இல்லாமலும் வைத்திருப்பதே எங்கள் முக்கிய நோக்கம். மற்றொரு முக்கியக் குறிக்கோள் பெண்கள் அதிகாரமளிப்பதை ஊக்குவிப்பதாகும். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து தெரிவிக்க பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்வோம். அவர்கள் கல்வி மற்றும் அதிகாரம் பெறும் வகையில் இளம் தலைமுறை பெண்களை ஊக்குவிப்போம்" என்று தெரிவித்தார்.