கவுரவம் பார்க்காமல் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார்.
குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று பேசினார். அப்போது பிரதமர் மோடியும் அவையில் இருந்தார்.
குலாம் நபி ஆசாத் பேசியதாவது:
''ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்துள்ளது மத்திய அரசு. இதனால், மேம்பாட்டுப் பணிகள் முறையாக நடக்கவில்லை என்று மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். ஆதலால், விரைவில் மாநில அந்தஸ்தை வழங்கிட வேண்டும்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த 3 சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சில விவசாயிகள் காணாமல் போயுள்ளார்கள். அவர்களைக் கண்டுபிடிக்க அரசு குழுவை அமைக்க வேண்டும்.
குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் கண்டனத்துக்குரியவை. ஜனநாயகத்துக்கு விரோதமானது என எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன. அதிலும் தேசியக் கொடியை அவமானப்படுத்தியதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. அதைச் செய்தவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும்.
நமக்கு அன்னத்தை வழங்கும் விவசாயிகளுடன் எதிர்ப்பைக் காட்டுவதற்கு பதிலாக, மத்திய அரசு பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், மற்ற விஷயங்களிலும் அக்கறை காட்ட வேண்டும்.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மற்றும் சில பத்திரிகையாளர்கள் மீது தேசதுரோக வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளார்கள்.
சசி தரூர் ஏற்கெனவே இந்த நாட்டின் வெளியுறவுத்துறை இணையமைச்சராக இருந்தவர். நாட்டின் பிரதிநிதியாக வெளிநாடுகளுக்குச் சென்றவர். அவர் மீது எப்படி தேசதுரோக வழக்குத் தொடரமுடியும். அப்படியென்றால், நாம் அனைவரும் தேசதுரோகிகள்தான். அவர் மீது தொடரப்பட்ட தேசதுரோக வழக்கை ஜனநாயகத்தின் நலன் கருதி திரும்பப் பெற வேண்டும்''.
இவ்வாறு குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.