குடியரசுதினத்தன்று நடைபெற்ற டிராக்டர் ஊர்வலத்தின் வன்முறைக்கு பின் பல நூறு விவசாயிகள் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது. இவர்களை டெல்லி அரசு தேடிப்பிடிக்கும் என முதல் அமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று முதல்வர் கேஜ்ரிவால் கூறியதாவது:
போராட்டத்திற்கு வந்த பல விவசாயிகள் காணவில்லை என என்னை பலரும் நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர்.
இதுபோல், வீடு திரும்பாதவர்களை கண்டுபிடித்து குடும்பத்தினரிடம் ஒப்படைப்பது அரசின் கடமையாகும். இதில் என்ன நடந்திருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது.
இவர்கள் கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கலாம். இந்த தகவலை அவர்களால் தம் குடும்பத்தினருக்கு அளிக்க முடியாமல் போயிருக்கலாம்.
குடியரசு தினத்தன்று மட்டும் 115 விவசாயிகளை டெல்லி போலீஸார் கைது செய்து சிறைகளில் தள்ளியுள்ளனர். அவர்கள் பெயர் விவரங்களை எடுத்து நம் அரசு வெளியிட உள்ளது.
இந்த பட்டியலில் காணாமல் போன பலரும் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. இப்பிரச்சனையை மத்திய அரசு மற்றும் டெல்லி துணைநிலை ஆளுநரிடம் எடுத்துச் செல்வேன்.
இதன் பிறகும் கிடைக்காதவர்களை நம் அரசு தேடிப்பி பிடிக்கும் என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.