இந்தியா

விவசாயச் சட்டங்கள்; மாநிலங்களவையில் விவாதம் தொடங்கியது: எதிர்க்கட்சிகள் கோரிக்கை ஏற்பு

செய்திப்பிரிவு

மாநிலங்களவையில் விவசாயச் சட்டங்கள் தொடர்பாக விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். பின்னர் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இதனை தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து நேற்று காலை மாநிலங்களவை கூடியதும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

அவையின் அனைத்து அலுவல்களையும் ஒத்தி வைத்து விட்டு விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறும் தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

ஆனால் விவசாயச் சட்டங்கள் குறித்து விவாதிக்க புதன் கிழமை ஒதுக்கப்பட்டும் எனவும் மற்ற அலுவல்கள் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான வெங்கய்ய நாயுடு கூறினார்.

ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் அவை 3 முறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று அவை தொடங்கியதும் மீண்டும் விவசாய சட்டங்கள் குறித்த பிரச்சினையை எதிர்க்கட்சிள் எழுப்பின. இதனால் அவை சிறிதுநேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் இந்த பிரச்சினை தொடர்பாக நாடாளுமுன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நடவடிக்கை எடுத்தார். வெங்கய்ய நாயுடு தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் கேள்வி நேரத்தை ரத்து செய்து விவசாய சட்டம் தொடர்பாக விவாதிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் என வெங்கய்ய நாயுடு அறிவித்தார். அதன்படி விவசாய சட்டம் குறித்து விவாதிக்க 15 நேரம் ஒதுக்கப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொண்டன. இதனைத் தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT