இந்தியா

வங்கி பணம் ரூ.22.50 கோடியுடன் தலைமறைவான வேன் டிரைவர் கைது: டெல்லியில் போலீஸார் அதிரடி

ஐஏஎன்எஸ்

டெல்லியில் வங்கி பணம் ரூ.22.50 கோடியை கடத்திச் சென்ற ஏடிஎம் வேன் ஓட்டுநரை போலீஸார் நேற்று கைது செய்தனர். கடத்தப்பட்ட பணத்தை அவரிடம் இருந்து மீட்டனர்.

மேற்கு டெல்லியின் விகாஸ்புரியில் உள்ள ஆக்சிஸ் வங்கிக்கு நகரம் முழுவதும் ஏடிஎம் மையங்கள் இயங்கி வருகின்றன. கடந்த வியாழக்கிழமை அன்று பல்வேறு ஏடிஎம் மையங்களில் நிரப்புவதற்காக வேனில் சுமார் ரூ.22.50 கோடி எடுத்துச் செல்லப்பட்டது. வங்கி ஓட்டுநர் பிரதீப் சுக்லாவுடன், காவலாளி வினய் படேலும் சென்றி ருந்தார்.

ஒஹ்லா என்ற பகுதி நோக்கி வேன் சென்று கொண்டிருந்தபோது வழியில் இயற்கை உபாதைக்காக காவலாளி வினய் படேல் வேனில் இருந்து இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக வங்கி ஓட்டுநர் பிரதீப் சுக்லா திடீரென வேனுடன் தலைமறைவானார்.

இதனால் பதற்றமடைந்த காவலாளி வினய் படேல் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

ரூ.22.50 கோடி பறிமுதல்

இதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்ட போலீஸார், அன்றிரவு ஒஹ்லா பகுதியில் உள்ள ஒரு குடோனில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுநர் பிரதீப் சுக்லாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அத்துடன் அவரிடம் இருந்த வங்கி பணம் ரூ.22.50 கோடியையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘காவலாளியிடம் இருந்து பணத்துடன் தப்பிச் சென்ற ஓட்டுநர், நேராக ஒஹ்லாவில் உள்ள குடோனுக்கு சென்று பணத்தை பதுக்கி வைத்தார். பின்னர் கோவிந்தபுரி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து வேனை மறைத்துவிட்டு மீண்டும் பணம் இருக்கும் இடத்துக்கு சென்றுவிட்டார். கைப்பற்றப்பட்ட பணத்தில் ரூ.11 ஆயிரம் மட்டும் குறைவாக உள்ளது’’ என்றனர்.

SCROLL FOR NEXT