இந்தியா

விவசாயிகளுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ளீர்களா?- பிரதமருக்கு பிரியங்கா கேள்வி

ஏஎன்ஐ

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், டெல்லி எல்லைகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கம்பி வளையங்கள், மஞ்சள் நிற பேரிகேடுகள் 4 அடுக்குகள், ஆணிகள், போலீஸ், அதிரடிப் படையினர் என டெல்லி - மீரட் சாலையில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் தொடர்ந்து முன்னேறுவதைத் தடுக்கும் வகையில் முட்கம்பியுடன் கூடிய இந்த தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இதனைச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்திந்தி காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பிரதமர் மோடிக்கு காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா, "மதிப்பிற்குரிய பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் விவசாயிகளுடன் போரில் ஈடுபட்டுள்ளீர்களா?" என வினவியிருக்கிறார். இந்தியில் அவர் இந்த ட்வீட்டைப் பதிவு செய்திருக்கிறார். கூடவே பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அதேபோல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு ஓர் அறிவுரை வழங்கியிருக்கிறார்.
அதில், "பாஜக தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுடனான உறவைப் பேண பாலங்களைக் கட்டி தொடர்பை ஏற்படுத்த வேண்டுமே தவிர தடுப்புச் சுவர்களை அல்ல" எனப் பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நீடிக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்காக எனக் கூறி மாநில எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டதையடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா வத்ரா ஆகியோர் இக்கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

இதற்கிடையில், அக்‌ஷர்தம் பகுதியை ஒட்டிய சாலைகளை டெல்லி போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆகையால் டெல்லி - காசியாபாத் இடையே தேசிய நெடுஞ்சாலை 24ல் வாகனப் போக்குவரத்து தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த சில மாதங்களாக, மத்திய அரசின் பின்வரும் இந்த மூன்று வேளாண் சட்டங்களை முன்வைத்து போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் எதிர்க்கு அந்த 3 சட்டங்கள் என்னென்ன?

1. அத்தியாவசியப் பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து விலைகள் கட்டுப்பாட்டைத் தளர்த்தி சில பொருட்கள் அளவில் அதிகமாக விற்கப்படுவது அத்தியாவசியப் பொருளாகக் கொள்ளப்படும்.
2. ஒப்பந்த வேளாண்மைக்கு அனுமதி மற்றும் வசதி செய்து கொடுத்தல்
3. ஏபிஎம்சி என்று அழைக்கப்படும் வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிக்களின் எல்லைக்கு வெளியே தனியார் சந்தைகளை நிறுவுவது.

இந்த மூன்று சட்டங்களை எதிர்த்து தங்களின் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT