இந்தியா

நரேந்திர மோடி பிரதமரான பிறகு பட்ஜெட் தாக்கல் முறையில் மாற்றங்கள்

செய்திப்பிரிவு

மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் முறையில் பிரதமர் நரேந்திர மோடி அரசு தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. இதன் மூலம் பல்லாண்டு கால நடைமுறைகள் சில முடிவுக்கு வந்துள்ளன.

கடந்த 1924 முதல் ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. 2017-ல் இது, பொது பட்ஜெட் உடன் இணைக்கப்பட்டது. 2017-ல் இந்த ஒருங்கிணைந்த முதல் பட்ஜெட்டை அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். இதன் மூலம் 92 ஆண்டு கால வழக்கம் முடிவுக்கு வந்தது. அப்போது முதல் இந்த மாற்றம் தொடர்கிறது.

அடுத்து பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் 2017-ல் பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் நிதியாண்டு தொடங்கும் ஏப்ரல் மாதத்தில் அந்தந்த திட்டங்களுக்கு உரிய நிதியை பயன்படுத்த முடியும் என கூறப்பட்டது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1947-ல் ஆர்.கே.சண்முகம் செட்டியார் பட்ஜெட் தாக்கல் செய்ய வந்தபோது பட்ஜெட் ஆவணங்களை சிறிய தோல் பெட்டியில் கொண்டு வந்தார். இந்த வழக்கத்தை மத்திய நிதி அமைச்சர்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தனர். இந்நிலையில் இது வெளிநாட்டுக் கலாச்சாரம் என தோல் பெட்டிக்கு பிரதமர் மோடி அரசு முடிவு கட்டியது. 2019-ல் பட்ஜெட்டை புத்தக வடிவில் சிகப்பு நிற துணியால் அழகாக கட்டிக் கொண்டு வந்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். இது இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றுவதாகப் பாராட்டப்பட்டது.

பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு, அச்சிடப்பட்ட பட்ஜெட் நகல் அமைச்சகங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் நடைமுறை இருந்தது. இந்த வழக்கம் நிறுத்தப்பட்டு பட்ஜெட்டின் நகல் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த வருடம் மேலும் ஒரு மாற்றமாக பட்ஜெட்டுக்காக தனி செயலி அறிமுகம் செய்யப்பட்டு கைப்பேசிகளில் வலம் வருகிறது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியிலும் பட்ஜெட் தாக்கலில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டது. மாலையில் பட்ஜெட் தாக்கம் செய்யப்படும் வழக்கமானது காலை 11 மணிக்கு மாற்றப்பட்டது. நிதியமைச்சராக யஷ்வந்த் சின்ஹா இருந்தபோது 1999-ல் இந்த மாற்றம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT