கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையில் 'யானை திருவிழா' நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட யானைகள் பங்கேற்று கால்பந்து, கூடை பந்து விளையாடி பார்வையாளர்களை மகிழ்வித்தன.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையில் துபாரே யானைகள் முகாம் உள்ளது. ஜெய்ப்பூர், கேரள மாநிலங்களில் நடைபெறும் யானை திருவிழாவைப் போல இங்கும் ஆண்டுதோறும் யானை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. குடகு மாவட்ட வனத்துறை சார்பாக நேற்று நடத்தப்பட்ட இந்த திருவிழாவில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் பங்கேற்றன.
அதிகாலை நேரத்தில் காவிரி ஆற்றில் குளிப்பாட்டப்பட்ட யானைகள் வண்ணப்பூச்சுக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. விழாவின் ஒருபகுதியாக ஃபேஷன் ஷோ-க்களில் அழகிகள் 'பூனை நடை' நடப்பதைப் போல 'யானை நடை' நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பாகன்கள் வழங்கிய உத்தரவுகளின்படி யானைகள் முன்னங்கால்களை தூக்கி, மெல்ல நடனம் ஆடின.
அதன் பிறகு 5 வயதில் தொடங்கி 50 வயது வரையிலான யானை களுக்கு இடையே ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதையடுத்து யானைகளுக்கு இடையேயான கால் பந்து ஆட்டம் மற்றும் கூடை பந்து ஆட்டம் நடைபெற்றது. இறுதி யாக அங்கு நூற்றுக்கணக்கில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் மீது யானைகள் காவிரி நீரை வாரித் தூவி ஆசிர்வதித்தன. யானை திருவிழாவை உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.