பிரதிநிதித்துவப் படம். 
இந்தியா

பொய் வழக்குகளில் தந்தை கைது; அரசு மிதிவண்டியை ஏற்க மறுத்த மகள்: கடிதம் எழுதி கவனத்தை ஈர்த்த பள்ளி மாணவி

பிடிஐ

பொய் வழக்குகளில் தந்தை கைது செய்யப்பட்டதால் அரசு தரும் மிதிவண்டியைப் பெற்றுக்கொள்ள தனக்கு விருப்பமில்லை எனக் கூறி அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி கவனத்தை ஈர்த்துள்ளார் மேற்கு வங்க பள்ளி மாணவி ஒருவர்.

இச்சம்பவம் மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு வங்கத்தின் பீர்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளில் சபுஜ் சத்தி (பசுமை துணை) திட்டத்தில் மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இத்திட்டம் மம்தா பானர்ஜி அரசினால் கடந்த 2015ல் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மாநிலத்தின் மதரஸாக்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச மிதி வண்டிகள் விநியோகிக்கப்பட்டன.

இதுகுறித்து பீர்பூம் மாவட்டத்தைச் சேர்ந்த இச்சம்பவம் நடைபெற்ற அரசுப் பள்ளியொன்றின் தலைமை ஆசிரியர் கூறியதாவது:

வெள்ளிக்கிழமை எங்கள் பள்ளியில் சபுஜ் சத்தி திட்டத்தின் கீழ் மிதிவண்டிகள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மாணவி ஒருவர் அரசு வழங்கும் மிதிவண்டியை ஏற்க மறுப்பதாகக் கூறினார். அவர் தனது தந்தை பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டதால் எனக்கு அரசின் இலவச மிதிவண்டி தேவையில்லை என பள்ளி நிர்வாகத்திற்கு கைப்பட கடிதம் ஒன்றையும் எழுதிக் கொடுத்துள்ளார். இதுகுறித்து நாங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து மிதிவண்டியை திருப்பி அனுப்பியுள்ளோம்.

இவ்வாறு பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மாணவியின் பெயரை தலைமை ஆசிரியர் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய மாணவி கூறுகையில், '' எந்தவித குற்றத்தையும் செய்யாத என் தந்தை மீது போலீஸார் பொய் வழக்குகளில் சிக்கவைத்தனர். இதனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். எனது தந்தை போலீஸ் காவல் மற்றும் நீதிமன்றக் காவலில் இருந்தபோது நாங்கள் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது'' என்றார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை கூறியதாவது:

பாஜகவின் மயூரேஷ்வர் -2 தொகுதியின் தலைவரான என் மீது, கடந்த ஆண்டு பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போலீசார் ஒன்றன்பின் ஒன்றாக வழக்குத் தாக்கல் செய்தனர். இதனால் நான் 35 நாட்கள் போலீஸ் காவலில் மற்றும் நீதிமன்றக் காவலில் சிறைவாசம் இருக்க வேண்டியிருந்தது. தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளேன். என்னை கைது செய்து சிறையில் அடைத்தது என மகளை மிகவும் பாதித்துள்ளது. அதனால் அவர் அரசு வழங்கும் மிதிவண்டியை பெறக்கூடாது என்ற முடிவை அவராகவே எடுத்துள்ளார்.

இவ்வாறு மாணவியின் தந்தை தெரிவித்தார்.

எனினும் இதுகுறித்து உள்ளூர் திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் இச்சம்பவத்தை விமர்சித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், ''ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக தனது தந்தையின் தூண்டுதலின் பேரில் சிறுமி சைக்கிளை ஏற்கவில்லை'' என்று குற்றம் சாட்டினர்.

SCROLL FOR NEXT