இந்தோனேசிய விமான நிலையம் திடீரென மூடப்பட்டதால், நிழல் உலக தாதா சோட்டா ராஜனை அழைத்து வருவது தாமதமாகி உள்ளது. அவரை சிபிஐ அதிகாரிகள் இன்று அழைத்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி சோட்டா ராஜன். தாவூத்திடம் இருந்து பிரிந்து தனியாக கொலை, கொள்ளை, போதை கடத்தல் போன்ற பல குற்றச்செயல்களில் சோட்டாராஜன் ஈடுபட்டு வந்தார். அவரை கடந்த மாதம் 25-ம் தேதி இந்தோனேசியாவில் இன்டர்போல் போலீஸார் கைது செய்தனர்.
இந்தியாவில் அவர் மீது 75 வழக்குகள் உள்ளன. எனவே அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக் கொண்டது. இந்தோனேசிய அரசும் சோட்டா ராஜனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க ஒப்புக் கொண்டனர். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள், மும்பை மற்றும் டெல்லி போலீஸார் பாலி தீவுக்கு வந்தனர். முதல் முறையாக சோட்டா ராஜனை சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.
இதற்கிடையில் இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள மலைகளில் எரிமலை குழம்பு வெளியேற தொடங்கி உள்ளது. அதனால் கரும்புகை பரவியுள்ளது. அந்தப் பகுதியில்தான் இந்தோனேசிய சர்வதேச விமான நிலையம் உள்ளது. தீப்பிழம்பு மற்றும் கரும்புகையால் விமான நிலையம் இன்று வரை மூடப்பட்டுள்ளது. எனவே, சோட்டா ராஜனை இந்தியா அழைத்து வருவது தாமதமாகி உள்ளது.
இதுகுறித்து உயரதிகாரிகள் கூறும்போது, “நாளை காலை (இன்று) 8.45 மணி வரை விமானத்தை இயக்குவதற்கு சாத்தியமில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, சோட்டா ராஜனை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பது தாமதமாகிறது” என்றனர்.
இந்திய அதிகாரிகளிடம் ஒப் படைக்கப்பட்டுள்ள சோட்டா ராஜனை நேற்றுமுன்தினம் இரவே இந்தியாவுக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டிருந்தது. எதிர்பாரா மல் விமான நிலையம் மூடப்பட்ட தால் பயணம் ஒரு நாள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது