குற்றவாளிகளை ஒரு நாடு இன்னொரு நாட்டிடம் ஒப்படைப்பதுதான், ‘குற்றவாளிகள் ஒப்படைப்பு ஒப்பந்தம்’ எனப்படுகிறது. ஏனெனில், வேறு ஒரு நாட்டில் செய்த குற்றங்களுக்காக ஒருவரை இன்னொரு நாட்டு சட்டத்திட்டத்தின்படி விசாரணை நடத்தி தண்டனை வழங்க முடியாது. இந்நிலையில் அந்தந்த நாட்டு சட்டத்தை பராமரிக்கவும் இந்த ஒப்பந்தம் உதவுகிறது.
இதுபோல் உலக நாடுகள் பல நாடுகளுடன் ஒப்பந்தம் மேற் கொள்கின்றன. எனினும், குற்ற வாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந் தத்துக்கு பல நாடுகள் ஒப்புக் கொள்ளாத நிலையும் இருக்கிறது. உதாரணமாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் குற்ற வாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் இல்லை.
இந்தியாவில், ‘இந்திய குற்ற வாளிகள் ஒப்படைப்பு சட்டம் 1962’ அமலில் உள்ளது. இச்சட்டம் இந்தியாவில் கைது செய்யப்படும் வெளிநாட்டினரை சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைக்க வழிவகை செய்கிறது. அதேபோல் மற்ற நாடுகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகள், இந்தியாவில் குற்றங்களில் ஈடுபட்டிருந்தால், அவர்களை இந்தியாவிடம் ஒப் படைக்கவும் இந்தச் சட்டம் பயன் படுத்தப்படுகிறது. எனினும், சம்பந்தப்பட்ட நாடுகளிடம் இதற் கென தனி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்தச் சட்டத்தின் 3-வது பிரிவின்படி, சம்பந்தப்பட்ட குற்றவாளியை தங்களிடம் ஒப்படைக்க இந்தியா அறிவிக்கை வெளியிடும்.
வெளிநாடுகளால் தேடப்படும் குற்றவாளிகள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட நாட்டிடம் இருந்து நேரடியாகவே ஒரு நாடு கேட்டு பெறும். அல்லது சர்வதேச போலீஸ் என்றழைக்கப்படும் இன்டர் போலிடம் இருந்து கேட்டு பெறும். குற்றவாளிகளுக்கு எதிராக இன்டர்போல் ரெட் நோட்டீஸ் வெளியிடும். மேலும், எல்லா நாட்டு குடியேற்ற துறை அதிகாரிகளுக்கும் குற்றவாளிகள் பற்றிய விவரங்களை இன்டர்போல் அனுப்பி வைக்கும். அந்த விவரங்களை வைத்து குற்றவாளிகள் எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்கு கைது செய்யப்படுவார்கள்.
இந்த விவரங்களை வைத்து குற்றவாளி ஒருவர் ஒரு நாட்டில் பிடிபடுகிறார் என்றால், அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுதான் கேள்வி. ஒரு நாட்டில் குற்றங்கள் புரிந்து விட்டு, வேறொரு நாட்டில் கைது செய்யப்படும் போது அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா? இதற்குதான் குற்ற வாளிகளை பரஸ்பரம் ஒப்படைக் கும் ஒப்பந்தம் உதவுகிறது.
இந்திய குற்றவியல் சட்ட பிரிவு 34-ன்படி, குற்றவாளிகளை (அவர் வெளிநாட்டினராகவோ அல்லது இந்தியராகவோ இருக்கலாம்) கைது செய்ய முடியும். அதன்பின் தூதரக வேண்டுகோள் உட்பட சில நிபந்தனைகளின்படி மட்டும், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை சம்பந்தப்பட்ட நாடு இந்தியாவிடம் ஒப்படைக்கும். அதற்கு முன்னதாக குற்றவாளி கைது செய்யப்பட்ட பகுதியில் உள்ள நீதிமன்றத்தின் அனுமதி பெறப்படும்.
குற்றவாளிகளை ஒப்படைக் கும் ஒப்பந்தத்தை இந்தியா 37 நாடுகளுடன் ஏற்படுத்தி கொண் டுள்ளதாக சிபிஐ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, பக்ரைன், வங்கதேசம், பெலாரஸ், பெல்ஜியம், பூடான், பல்கேரியா, கனடா, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங், குவைத், மலேசியா, அமெரிக்கா, ரஷ்யா உட்பட 37 நாடுகளுடன் குற்றவாளிளை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது.
தவிர பிஜி, இத்தாலி, பப்புவா நியூகினியா, சிங்கப்பூர், இலங்கை, சுவீடன், தான்சானியா, தாய்லாந்து ஆகிய 8 நாடுகளுடன் குற்றவாளிகளை ஒப்படைப்பது தொடர்பாக ஏற்பாடு செய்து வைத்துள்ளது.
குற்றவாளிகளை பரஸ்பரம் ஒப்படைக்க சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட சில விதி முறைகள் இருக்கின்றன. உதாரணத் துக்கு தண்டனைக்குரிய குற்றமாக இருநாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டதாக இருக்க வேண்டும். குற்றவாளியை ஒப்படைத்தால் சம்பந்தப்பட்ட நாட்டில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் என்ற நிலை இருந்தாலும், குற்றவாளிகளை ஒப்படைக்க மறுக்கலாம்.
இந்தோனேசியாவுடன் 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம், குற்ற வாளிகளை ஒப்படைக்கும் ஒப் பந்தத்தை இந்தியா மேற்கொண் டது. அந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டாமல் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் நிழல் உலக தாதா சோட்டா ராஜனை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.