இந்தியா

ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர்; ஜல் ஜீவன் இயக்கத்தில் எம்.பி.க்களுக்கும் பங்களிப்பு

செய்திப்பிரிவு

2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்கும் ஜல் ஜீவன் இயக்கத்தின் திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் முயற்சியில் நாடாளுமன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களது செயல்பாடுகள் தொடர்பாகவும், இலக்கை எட்டுவதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு தொடர்பாகவும் தேசிய ஜல் ஜீவன் இயக்கம், மாநிலங்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

மாவட்டங்களில் இந்த திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வது, மக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பது, போதிய நிதி வசதியை அளிப்பது, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் எழும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது போன்ற அனைத்து பணிகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடுவார்கள்.

ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் மாவட்ட அளவிலான மாவட்ட மேம்பாடு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (திஷா) இணை தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்டங்களில் அனைத்து ஊரக வீடுகளிலும் குடிநீர் வசதிகளை வழங்குவதற்கான மாவட்ட செயல் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகள்/ கருத்துக்களின் அடிப்படையிலேயே இறுதி செய்யப்படும்.

“ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர்” என்று ஒரு மாவட்டத்தை அறிவிக்கும் முன்னர், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை கலந்தாலோசித்து அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பது உறுதி செய்யப்படும்.

நாட்டிலேயே முதல் மாநிலமாக கோவாவிலும் அதைத்தொடர்ந்து தெலங்கானாவிலும் அனைத்து ஊரக வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வரும் 2023-ம் ஆண்டுக்குள் இந்த திட்டத்தை 100 சதவீதம் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்திலும் 3.28 கோடி வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டன. இதன் வாயிலாக தற்போது 34 சதவீதத்திற்கும் அதிகமான ஊரக வீடுகள் (6.52 கோடி) குடிநீர் குழாய் இணைப்புகளைப் பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT