டெல்லியில் குடியரசு தின கலவரத்தில் காயமடைந்த அதிகாரிகளின் குடும்பத்தினர் டிராக்டர் பேரணி வன்முறைக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. போலீஸாருக்கும் , விவசாயிகளில் ஒருபிரிவினருக்கும் இடையே நடந்த மோதலில் 100-க்கும்மேற்பட்ட போலீஸாரும், விவசாயிகளும் காயமடைந்தனர்.
டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில், செங்கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்து, சீக்கிய மதக் கொடியை ஏற்றியவர்கள் மீது தேசத்துரோக வழக்கை டெல்லி போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லி எல்லையில் காஸிபூர், சிங்கு, திக்ரித் உட்பட விவசாயிகள் பேராட்டம் நடைபெறும் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு இணைய சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.
ஜனவரி 26- ம் தேதி விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது வன்முறையில் காயமடைந்த டெல்லி போலீஸ் மகா சங்கத்தைச் சேர்ந்தவர்களும் காவல்துறையினரின் குடும்ப உறுப்பினர்களும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஷாஹீதி பூங்காவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் தற்போதைய டெல்லி காவல்துறை அதிகாரிகளும் அவர்களுடன் இருந்தனர்.
இப்போரோட்டத்தில் கலந்துகொண்ட காயமடைந்த தலைமை கான்ஸ்டபின் அசோக் குமார் கூறியதாவது: "நான் செங்கோட்டையின் வாயிலில் நிறுத்தப்பட்டேன். திடீரென நுழைந்த கூட்டம் எங்களை வெளியே கொண்டு தள்ளிவிட்டு கொடியை ஏற்றியது, அதன் பிறகு நாங்கள் திடீரென தாக்கப்பட்டோம். அவர்களிடம் கம்புகளும் வாள்களும் இருந்தன. என் தலை மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டன, "என்றார்.
குடியரசு தினத்தன்று நடந்த தாக்குதலின்போது பி.எஸ். மாடல் டவுனில் பணியமர்த்தப்பட்ட தலைமை கான்ஸ்டபிள் சுனிதா என்பவரும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர். இவரும் சம்பவத்தன்று காயமடைந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் முகர்பா சவுக்கில் காவல் பணியில் நிறுத்தப்பட்டேன். அங்கு துணை போலீஸ் கமிஷனர் மற்றும் உதவி போலீஸ் கமிஷனரும் இருந்தனர். அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அனுமதிக்கப்பட்ட பாதையில் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் ஆக்ரோஷமாக மாறி, தடுப்புகளை உடைத்து, எங்களைத் தாக்கி, வாகனங்களை அழித்தனர், "என்று அவர் கூறினார்.