இந்தியா

சேதுசமுத்திர திட்டம் தொடர்பான நிலைப்பாடு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 4 வாரம் அவகாசம்

செய்திப்பிரிவு

சேது சமுத்திர திட்டம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 4 வாரம் அவகாசம் அளித்துள்ளது.

தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடல்பகுதியில் திட்ட மிடப்பட்ட சேது சமுத்திர திட்டத் தால், ராமரால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் பாலம் இடிக்கப்படு வதற்கு சில அரசியல் கட்சிகளும், இந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் ராமர் பாலம் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரி வித்து உச்ச நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2009-ம் ஆண்டு வழக்கு தொடுத்திருந்தார்.

இந்நிலையில், ராமர் பாலத்தை இடிப்பதில்லை என மத்திய அரசு முடிவெடுத்திருப்பதால் தனது மனுவைத் திரும்பப் பெறுவதாக சுப்பிரமணியன் சுவாமி கடந்த 23-ம் தேதி மனு செய்திருந்தார்.

மேலும், இவ்வழக்கு தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, அருண் மிஸ்ரா ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்படுகிறது. வரும் டிசம்பர் 2-ம் தேதி ஹெச்.எல். தத்து ஓய்வு பெறுவதால், இவ்விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டு விடும். அந்த அமர்வில் அருண் மிஸ்ரா இடம்பெறப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். எனவே, இம்மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இம்மனுவை ஹெச்.எல். தத்து தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், சுப்பிரமணியன் சுவாமியின் மனு தொடர்பாக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த மத்திய அரசுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் எனக் கோரினார்.

அக்கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் 4 வார அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT